Friday, March 4, 2016

டாக்ஸி (2015) - ஜாஃபர் பனாஹி - மக்களுக்கான இயக்குனர்.
வெறும் 75-நிமிடங்களே கொண்ட ஈரானிய படமான டாக்ஸி (Taxi Teheran) மூலம் நம்மை சற்று ஆழமாகவே சிந்திக்க வைக்கிறார் இயக்குனர் ஜாஃபர் பனாஹி (Jafar Panahi). பொதுமக்களிடையே ஒரு திரைப்பட இயக்குனர் என்பவன் யார், எத்தனை பேர் அவனை நேரில் பார்க்கும்போது அடையாளம் காண்கின்றனர், அடையாளம் தெரிந்தவர்கள் அவனை எவ்வாறு அணுகுகின்றனர், அரங்கில் அவனது படங்களை பார்த்த மக்களுக்கு அவனிடம் நேரில் பேசிப், பழக எந்த அளவு உரிமையும், சுதந்திரமும் இருக்கிறது என்று பல கேள்விகளை டாக்ஸி மூலம் முன்வைக்கிறார் பனாஹி. ஈரானிய மக்களுக்கு என்றல்லாமல் உலக அளவில் மக்களுக்கு இயக்குனர் என்பவன் எந்த அளவுக்கு நெருக்கமானவன் என்று படம் பார்ப்பவர்களை யோசிக்க வைத்ததே டாக்ஸியின் குறுப்பிடத்தக்க ஆச்சர்யம்.
ஈரானிய அரசின் தடையை மீறி பனாஹி எடுத்த மூன்றாவது படம் இது (This Is Not A Film, 2011; Closed Curtain, 2013). ஒரு டாக்ஸி ஓட்டுனராக மக்களை அணுகுகிறார். பலருக்கு வழிதெரியாத அனுபவமற்ற ஒரு டாக்ஸி ஓட்டுனராக மட்டுமே தெரிகையில், சிலருக்கு இவரை பார்த்தவுடன் அடையாளம் தெரிகிறது. அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் திருட்டு டிவிடி விற்பவர். நிறைய படங்கள் பனாஹிக்கு விற்றிருப்பதாக அவர் பனாஹியை நினைவூட்டுகிறார். பனாஹியுடனேயே ஒரு மாணவ இயக்குனரை சந்தித்து டிவிடி விற்கிறார். அந்த மாணவர் உலக சினிமா, அயல்நாட்டு தொலைக்காட்சித் தொடர்கள் (TV Series) என தனக்கு வேண்டிய டிவிடிக்களை தேடிக்கொண்டே பனாஹியிடம் உற்சாகமாக பேசுகிறார். தான் இயக்குனராக பனாஹியிடம் யோசனை கேட்டுப் பெறுகிறார். ஒரு இயக்குனர் தன் படைப்புகளின் மூலம் மக்களிடம் எவ்வளவு நெருக்கமாகிறான் என்பதை இந்த இடங்கள் அழுத்தமாக எனக்கு உணர்த்தியது.
அதுவும் அந்த டிவிடி விற்பவர் விடை பெறுகையில், பனாஹி, “நீங்களும் நானும் பார்ட்னர்ஸ்னு அந்த பையன்கிட்ட சொன்னீங்களாமே?” என்று கேட்கையில், “தப்பா நினைச்சுக்காதீங்க. ஒரு பிரபல இயக்குனருக்கு நான் நெருக்கமானவன்னு தெரிஞ்சா என் வியாபாரம் நல்லா போகும். அதுனாலதான் அப்படி சொன்னேன். உங்கள ஏமாத்தணும்னு நினைக்கல” என்று சொன்னவுடன், “சரி.. பார்த்துப்போங்க” என்று சிரித்துக்கொண்டே பனாஹி கூறி விடைபெறுகையில், ஒரு இயக்குனரின் திரைப்படங்கள் மக்களிடம் எவ்வளவு சுலபாமாக தன்னை நெருக்கமாக்குகிறது என்பதை அட்டகாசமாக உணர்த்துகிறார் அவர்.
அதன் பிறகு, இரண்டு வயதான பெண்கள்; விபத்தில் அடிபட்ட ஒரு கணவன், அவனை காப்பாற்றத் துடிக்கும் அவனது மனைவி; ஆறு, ஏழு வருடங்களுக்கு பிறகு பனாஹி சந்திக்கும் அவரது நண்பர்; அவர் படம் எடுக்க அரசு தடை போட்டபொது அவருக்காக வாதாடிய பெண்மணி; தனது சொந்த சகோதரியின் எட்டு வயது மகள் என அடுத்தடுத்த கதாப்பாத்திரங்கள் டாக்ஸியில் நம்முடன் பயணிக்கின்றன.
அதுவும் சகோதரியின் மகளாக வரும் ஹானா ஒரு இடத்தில் டிஜிட்டல் கேமராவின் மூலம் ஒரு குறும்படம் எடுக்க முயன்று, குறிப்பிட்ட காட்சி சரியாக வரவேண்டும் என்று ஏங்கி, அது முடியாமல் போகவே தான் மனமுடைந்து போகிற காட்சியின் மூலம், தேர்ந்த ரசனை கொண்ட திரைப்படக் காதலர்களுக்கும், சினிமாவை கற்கும் மாணவர்களுக்கும், ஒரு நேர்மையான திரைப்படம் எடுக்கத் துடிக்கும் வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் பனாஹி எப்படி ஒரு வழிகாட்டியாக இருக்கிறார் என்பதை தெளிவாக காட்டுகிறது டாக்ஸி.
அரசின் எதிர்ப்பை மீறி படத்தை எடுத்தாலும், திரைப்பட விழாக்களில் பல பாராட்டுகளையும் பரிசுகளையும் படம் வென்றது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளில் (இந்தியா அல்ல) படம் வெளியாகி வசூலை குவித்துள்ளது. பெர்லின் திரைப்பட விழாவில் முதன்முதலில் படம் திரையிட்டபோது, எத்தனை தடை வந்தாலும் இதுபோல் எதாவது ஒரு வகையில் தான் தொடர்ந்து படம் எடுத்துக்கொண்டே இருக்கப்போவதாகவும், யாராலும் அதை தடுக்க முடியாது எனவும் வெளிப்படையாக பனாஹி கூறியுள்ளார்.
படத்தின் ஒவ்வொரு இடத்திலும் சினிமாவை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார், ஒரு இயக்குனராக மக்களிடம் எந்த அளவு நெருங்க முற்படுகிறார் என்பதை பார்க்கையில், பாட்டுக்காகவும், பிரம்மாண்டத்துகாகவும் மட்டுமே படம் எடுக்கும் நம்மூர் இயக்குனர்கள் நம்மிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருக்கின்றனர் என்று தோன்றுவது எனக்கு மட்டும்தானோ???

Wild Tales - கதை 1 - தமிழாக்கம்.
கடைசி பயணியாக அடித்து பிடித்து செக்-இன் செய்து விமானத்தில் ஏறுகிறாள் ஒரு இளம் பெண். விமானம் கிளம்புகிறது. பக்கத்தில் உட்காந்திருக்கும் ஒரு 70-வயது மதிக்கத்தக்க ஆணுடன் அவள் உரையாட, கதை துவங்குகிறது. (இவள் Passenger-1, அவர் Passenger-2 என வைத்துக்கொள்வோம். அடுத்தடுத்த பாத்திரங்களையும் இப்படியே கணக்கிடுவோம்.)

Passenger-2: வேலை விஷயமாவா, இல்ல சுற்றுலா மாதிரியா?

Passenger-1: இரண்டும்னு கூட சொல்லலாம். (சிரித்துக்கொண்டே)

Passenger-2: நீங்க என்ன பண்றீங்க?

Passenger-1: நான் ஒரு மாடல்.

Passenger-2: இது எனக்கு முன்னாடியே தோன்றி இருக்கணும். விளம்பரமா, இல்ல கேட்-வாக் (Catwalk) மாதிரியா?

Passenger-1: கேட்-வாக் தான், கேட்-வாக் தான். (மறுபடியும் சிரித்துக்கொண்டே) நீங்க என்ன பண்றீங்க?

Passenger-2: நான் ஒரு இசை விமர்சகர். கேட்க ஒரு மாதிரிதான் இருக்கும் உங்களுக்கு.

Passenger-1: அப்படிலாம் இல்ல. ராக்? (Rock)

Passenger-2: இல்லை. கிளாஸிக்கல். (Classical)

Passenger-1: என்னோட முதல் பாய்ஃபிரண்டு ஒரு கிளாஸிக்கல் இசையமைப்பாளர் தான். அதான் அவன் படிச்சான்.

Passenger-2: அவர் பெயர் என்ன?

Passenger-1: அவன் அந்த அளவுக்கு பிரபலம் இல்ல. நாங்க ஒண்ணா இருந்தப்போ சில இசைக்கொர்ப்புகளை அனுப்பி வாய்ப்புக்கு முயற்சி பண்ணீட்டு இருந்தான். ஆனா ஒன்னும் நடக்கலை. அவன் பெயர் கேப்ரியல் பாஸ்தர்னாக் (Gabriel Pasternak).

Passenger-2: பாஸ்-தர்-னாக்!!! அவனா? இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் ஒரு இசை விமர்சகர்னு சொல்றதுக்கு பதிலா சவக்குழி-தோண்டினு சொல்லியிருப்பேன். அவனோட இசைக்கோர்ப்பை நான் ப்ரெசிடெண்டா இருந்த இசைப்பள்ளியில தான் கொடுத்தான். அதை கேட்டுபாத்துட்டு அவனை ஒரு வழி பண்ணிட்டேன். சரமாரியா திட்டிவிட்டுட்டேன்.

Passenger-1: தெரியும். அப்போ நான் அவன்கூடதான் இருந்தேன். அவனுக்கு நீங்க செஞ்சது பெரிய கொடுமை. உங்க விமர்சனத்த படிச்சிட்டு அடுத்த ஒரு வாரத்துக்கு என்கிட்டகூட பேசலை. அப்படி அழுதான்.

Passenger-2: சில நேரங்கள்ல திறமைய அங்கீகரிப்பதை விட பல கோடி மக்களுடைய காதுகளையும் பாதுகாக்கனும்ங்கிறது ஒரு இசை விமர்சகருடைய கடமையா இருக்கு. என்ன பண்றது? சில சமயம் என் கணிப்பும் தப்பா இருக்கலாம். ஆனா அவனோட விஷயத்துல.. அந்த இசைக்கோர்ப்பு.. ரொம்ப வெறுப்பேத்துன ஒன்னு. அவன் கூட இன்னும் உங்களுக்கு பழக்கம் இருக்கா?

Passenger-1: இல்ல, இல்ல. எங்க ரெண்டு பேருக்கும் ஏதும் பெருசா ஒத்துப்போகலை. ஆனா இன்னமும் அவன எனக்கு புடிக்கும். அவன் ரொம்ப நல்லவன்.

Passenger-2: இருக்கலாம். இருந்தாலும் இப்போ நீங்களே இப்படி ஒரு இசைக்கோர்ப்பை கொடுத்து மதிப்பிட சொன்னீங்கன்னா உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்குன்னுதான் நினைக்கத் தோணும். கேப்ரியல் பாஸ்தர்னாக்!!! அவனை சத்தியமா என்னால மறக்க முடியாது. பல நாட்கள் அவனை நினைச்சு எங்க குழுவுல சிரிச்சிருக்கோம்.

Passenger-3: ஒரு நிமிஷம். நீங்க பேசுனதெல்லாம் நான் கேட்டுட்டுதான் இருந்தேன். ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. கேப்ரியல் பாஸ்தர்னாக் பாலோமர் (Palomar) தொடக்க பள்ளியில் என்னோட மாணவன். நானும் அவன பத்தி சொல்லியே ஆகணும். நாங்க அவனை ரொம்பவே கவனிச்சோம். கண்டிப்பா அந்த பையனுக்கு ஏதோ பிரச்சனை இருந்திருக்கு. என் 30-வருஷ வேலை அனுபவத்தில் அவன மாதிரி ஒரு பையனை பார்த்ததே இல்ல. திடீர்னு சின்னக்குழந்தை மாதிரி கத்தி, அடம்பிடிச்சு அழுவான்.

Passenger-4: டீச்சர், நான் இக்னாஸியோ ஃபோண்டானா (Ignacio Fontana). என்னை ஞாபகம் இருக்கா?

Passenger-3: இக்னாஸியோ ஃபோண்டானா. நீயா? என்னால நம்பவே முடியல. இது எல்லாத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்கு. பாஸ்தர்னாக் (Pasternak) உன்கூட தான படிச்சான்? உனக்கு அவன தெரியும்ல?

Passenger-4: நல்லாவே தெரியும். நாங்க எல்லாரும் சேர்ந்து அவன்கிட்ட செம்ம கலாட்டா பண்ணுவோம். பாவம், பையன் ரொம்பவே அழுதிருக்கான் எங்களால.

Passenger-5: ஒரு நிமிஷம். இது சத்தியமா நம்ப முடியாத ஒரு கோ-இன்ஸிடென்ட். நீங்க சொன்ன அந்த பைத்தியக்காரன் நான் மேனேஜரா இருந்த ஒரு பல்பொருள் அங்காடியில கொஞ்ச நாள் வேலை பார்த்தான். வாடிக்கையாளர்கள் கிட்ட ரொம்ப வம்பு பண்ணிட்டு இருந்தான்னு ஒரு நாள் அவனை துரத்தி விட்டுடோம். ஒருமுறை கூட நான் - -

Passenger-2: கொஞ்சம் இருங்க. (எல்லோரையும் பார்த்து) இங்க யாருக்காவது கேப்ரியல் பாஸ்தர்னாக்கை (Gabriel Pasternak) தெரியுமா?

"தெரியும்". அனைவரும் கையை தூக்குகின்றனர்.

Passenger-2: நீங்க எல்லாரும் ஏன் இந்த விமானத்துல ஏறுனீங்க? உங்களோட டிக்கெட்டை நீங்களே எடுத்தீங்களா?

அனைவரும் இல்லை என்கின்றனர்.

Passenger-5: நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்றேன். ஒரு கம்பெனில இருந்து எனக்கு டிக்கெட்டை அனுப்பி விட்டாங்க.

Passenger-6: ஒரு சுற்றுலா சம்பந்தப்பட்ட கம்பெனியில இருந்து மீட்டிங்கிற்கு வர சொல்லி எனக்கு டிக்கெட் அனுப்பி விட்டாங்க.

Passenger-3: எனக்கு ஒரு ஆன்லைன் போட்டியில் பரிசா இந்த டிக்கெட் கிடைச்சது. தேதியை மாத்த முடியாதுனு சொல்லிட்டாங்க. அதுனால வேற வழி இல்லாம இன்னைக்கே வந்தேன்.
.
.
.
திடீரென..
.
.
.
விமான பணிப்பெண் (Air Hostess): (பதட்டத்துடன்) கேப்ரியல் பாஸ்தர்னாக்தான் இந்த விமானத்தோட கேபின்-சீஃப் (Cabin Chief). நாங்க ரெண்டு பேரும் ஒரே சமயத்துல தான் இங்க ட்ரெய்னிங்கில் சேர்ந்தோம். ரெண்டு பேருக்கும் பழக்கம் இருக்கு. ஒரு நாள் வெளிய போகலாம்னு கூப்பிட்டான். நான் முடியாதுனு மறுத்ததும், அவன் ரொம்ப ஆத்திரம் ஆகி... வேணாம் விடுங்க. விமானம் கிளம்பியதும் காக்பிட்க்கு (Cockpit) காஃபி எடுத்திட்டு போனான். இப்போ காக்பிட் கதவை திறக்க மாட்டேங்கிறான். பைலட்டும் (Pilot) பதில் பேச மாட்டேன்கிறார். எனக்கு பயமா இருக்கு. என்ன பண்றதுன்னு தெரில.

Passenger-1: நான் அவனோட ஒரே நண்பனை காதலிச்சு அவனை ஏமாத்துனேன். அவனும் இங்கதான் இருக்கான். அதோ அங்க.

அடுத்த நொடி விமானம் குலுங்க ஆரம்பிக்கிறது. பதற்றத்தில் அனைவரும் கத்தி கூச்சலிடுகின்றனர்.

Passenger-7: கேப்ரியல்.. கேப்ரியல், இருக்கியா? நான் பேசுறது கேட்குதா? நான் விக்டர். விக்டர் ஜென்சென் (Victor Jensen). பதில் பேசு, ப்ளீஸ்!!!

Passenger-8: நீங்க யாரு அவனுக்கு?

Passenger-7: சில வருஷங்களா நான்தான் அவனோட மனநல மருத்துவரா இருந்தேன். கட்டணத்தை (fees) உயர்த்துறதா சொன்னேன். கோபப்பட்டு அதுக்கப்புறம் என்கிட்ட வர்றதையே விட்டுட்டான்.

விமானத்தின் குலுங்கலும், நடுக்கமும் அதிகரிக்கிறது. பயணிகளும் பதற்றத்தில் அலறுகின்றனர்.

Passenger-7: கேப்ரியல், இதுல உன் தப்பு எதுவும் இல்ல. இதுல நீ பாதிக்கப்பட்ட ஒருத்தன் மட்டும்தான். உனக்கு புரியுற விதத்துல தெளிவா சொல்றேன். உன் அம்மா, அப்பா தான் உன் வாழ்க்கைய சீரழிச்சிட்டாங்க. நீ பிறந்ததுல இருந்து உன்கிட்ட அவங்க அளவுக்கு அதிகமா எதிர்பார்த்துட்டாங்க. அவங்களோட எல்லா ஏமாற்றத்துக்கும் உன்னை காரணம் காட்டிட்டாங்க. நீ அனுபவிச்ச வேதனைகளுக்கும் அவங்க தான் பெரும் பொறுப்பு. இங்க இருக்கிறவங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்ல, கேப்ரியல். புரிஞ்சுக்கோ. கதவத் திற, ப்ளீஸ்!!!

விமானத்தின் வேகம் அதிகரிக்கிறது. அத்தனை ஆயிரம் அடிகளுக்கு மேலிருந்து விமானம் தரையை நோக்கி செல்வதை உள்ளே இருக்கும் அனைவராலும் உணர முடிகிறது. தான் சாகப்போவது உறுதி என ஒவ்வொருவராலும் உணர முடிகிறது. வேகம் சற்றும் குறையாமல் தரையை நெருங்குகிறது. அதன்பின் என்ன ஆனது??? பதிவின் போஸ்டரை பார்த்தாலே புரிந்திருக்கும்.

புறம்போக்கு - மே 26, 2015ல் எழுதியது.
புறம்போக்கு படத்தை இன்னொரு முறை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் முதல் முறை பார்த்ததிலிருந்தே உண்டானது. இந்த வார சனி, ஞாயிறுகளில் கூட டிக்கெட் இருந்தது. நண்பர் படத்துக்கு போகலாம் என்று சொன்னபோது, "புறம்போக்கு-க்கு டிக்கெட் இருக்கு பாஸ்" என்றதற்கு, "அது மொக்கனு சொன்னாங்களே ஜி" என்றார். அதற்கு மேல் அவரிடம் வாதாடத் தோன்றவில்லை.
இதைவிட பெரும் கூத்தை முதல் முறை படம் பார்க்கும்போதே காதுகுளிரக் கேட்டேன். இடைவேளையில், நான் இருந்த வரிசையின் மேல் வரிசையில் நான்கு நண்பர்களில் ஒருவர், "டேய், காமெடி படம்னுல்லடா நெனச்சு வந்தேன்." என்றார். "எத வெச்சு இது காமெடினு முடிவு பண்ண?" என்று இன்னொருவர் கேட்டதற்கு, "ஆமா. ஆர்யா, ஷாம், அப்புறம் நம்ம ஆளு விஜய் சேதுபதி இருக்காங்கல்ல. பொறம்போக்கு-னு டைட்டில். அதான் அப்படி நெனச்சேன். இங்க வந்து பார்த்தப்போதான் அதுக்கு கீழ ஏதோ பொதுவுடைமை-னுலாம் போடுறாங்க. கடைசி நேரத்துல மாத்திட்டாங்களா?" என்றார். அதற்கு பதில் சொன்ன அவரது நண்பர் என்னைப்போல் ஒரு அரைக்கிறுக்கனாக இருக்க வேண்டும். அவர், "டேய், டைட்டிலே அதான்டா. போதுவுடைமைன்னா கம்யூனிசம். படமே அதைப்பத்திதான். ஜனநாதன் படம்டா. அவர் படங்கள் இப்படிதான் இருக்கும். அதான் பார்க்கலாம்னு ஒரு ஆசைல..." என்று இழுத்தார். அதற்கு அந்த வெறுத்துப்போன நண்பர், "இந்த கெரகத்தல்லாம் முன்னாடியே சொல்லி இருந்தா அப்போவே நான் வரலைனு சொல்லி இருப்பேன். உனக்கு டிக்கெட் காசெல்லாம் கெடையாது. போயிரு" என்றார். அதற்கு மேல் அந்த கதை வேண்டாம்.
இது ஒரு இயக்குனரின் படம். ஒரு இயக்குனர் முழுக்க முழுக்க மக்களை நம்பி, மக்களுக்காக எடுத்த படம். குப்பைக் கிடங்கில் ஏற்படும் (நாம் நினைத்தும்கூட பார்த்திராத) அபாயங்கள், மரண தண்டனைக் கைதிகள் (பேரறிவாளன், சாந்தன், முருகன், செங்கொடி போன்றவர்களின் பெயரை குறிப்பிட்டதையே இந்தப் படத்தில் தான் முதல் முறை பார்க்கிறேன்), மக்களுக்கான விடுதலை, அதற்காக போராடும் ஒரு "தலைவன்", அவனை ஒரு சாரார் கடவுளாக பார்த்தாலும், மேல்தட்டுக் கூட்டங்கள் எப்படி ஒரு தேசதுரோகியாக சித்தரிக்கிறது என்று நாட்டின் முக்கிய பிரச்சனைகளை பேசியதற்காகவே, அந்த சிந்தனைக்காகவே ஜனநாதனை காலில் விழுந்து வணங்கினாலும் தகும். என் அறிவுக்கு எட்டிய அளவில் அவரின் பேராண்மைக்குப் பிறகு இந்த அளவுக்கு ஒரு சமூக சிந்தனையை பேசிய படத்தை தேடிப்பிடிக்க முடியவில்லை (அப்படி ஏதும் இருந்தால் குறிப்பிடவும்). இது அவருக்கே சாத்தியம்.
படம் பேசிய விஷயங்களுக்கு, இதில் ஒரு பெரிய நடிகர் நடித்திருந்தாலோ என்னவோ, கண்களில் எண்ணை விட்டுக்கொண்டு படத்தை தடைசெய்யச் சொல்லியோ அல்லது குறிப்பிட்ட வசனத்தை நீக்கச்சொல்லியோ ஒரு கும்பல் கிளம்பியிருக்கலாம். அந்த வகையில் படம் தப்பித்தது. ஆனால் அப்படி தடைபோடும் கூட்டத்தைவிட இப்படி (மேலே சொன்ன உதாரணங்களைப் போல) படத்தை குப்பையாக ஒதுக்கும் கூட்டங்களைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை (அதுவும் என்னை சுத்தியே நடக்குது).
கடைசியாக.. நடிகர்களுக்காக பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தோடு செல்பவர்களுக்கு (குறிப்பாக பெண்களுக்கு) இது ஒரு போரிங் படமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அவர்களும் படத்தை ரசித்தால் மகிழ்ச்சியே. அதையும் தாண்டி படத்தின் ஆழத்தை உணரும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் இது காலங்களுக்கும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு அற்புதம். லவ் யூ ஜனநாதன் சார்...!!!