Monday, December 22, 2014

CIFF '14க்கான எனது பரிந்துரைகள்: 7. Melbourne - தேடிவந்த வம்பு.Inline image 2

Melbourne/ Nima Javidi/ Iran/ 2014/ 91 min.

ஈரானிய படங்களில் குடும்பச்சூழலை சித்தரிக்கும்விதம் அவர்களுக்கே உரித்தான ஒரு கைவந்த கலை. அவ்வளவு எதார்த்தமாக ஒரு வீட்டிற்க்குள் அரங்கேறும் சூழலை அவர்களால் மட்டுமே திரைவடிவமாக நம் கண்முன் நிறுத்தமுடியும். பரவலாக உலகமெங்கும் கொண்டாடப்பட்ட A Separation (2011) முதற்கொண்டு பல ஈரானியப் படங்களில் இவ்வகையை பல வடிவங்களில் சித்தரித்துள்ளனர். அதுபோன்று 2014ல் வெளிவந்திருக்கும் மற்றுமொரு ஈரானியப் படம்தான் Melbourne.

ஆங்கிலம் தொடர்பான ஒரு முதுநிலை பட்டபடிப்பை படிப்பதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு கணவனும் மனைவியும் கிளம்புகின்றனர். மாலை 6 மணிக்கு விமானம். அதில் ஏறினாள் 4 வருடங்கள் கழித்துதான் தன் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். காலை எழுந்ததில் இருந்து அதற்கான பேக்கிங் வேலைகள் விறுவிறுவென நடக்கிறது. அந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் வேலைசெய்யும் பெண் அவசரமாக எங்கோ கிளம்புவதாகவும், தான் வரும்வரை ஒரு பொருளை பத்திரமாக பார்துக்கொள்ளவேண்டியும் இவர்களிடம் விட்டுச்செல்கிறாள். அது என்ன பொருள்? அதனால் இவர்கள் எதிகொள்ளும் சிக்கல்கள் என்ன? அந்த சிக்கலை எப்படி சமாளித்தனர்? விமானத்தை பிடித்தார்களா? என்பதுதான் விறுவிறுப்பான மீதிக்கதை.


முழுக்க முழுக்க ஒரு 8 மணி நேரத்திற்குள் ஒரு வீட்டிற்குள்ளேயே நடக்கும் கதை. பிரச்னையை சமாளிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகள், பதற்றத்தால் அவர்கள் எடுக்கும் சில முட்டாள்தனமான முடிவுகள் என 90 நிமிடத்திற்க்குள் பல கோணங்களில் கதையை சொல்லியிருக்கிறார் அறிமுக ஈரானிய இயக்குனர் Nima Javidi. Cairo சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான Golden Pyramid விருதை வென்றிருக்கிறது இத்திரைப்படம்.

CIFF '14க்கான எனது பரிந்துரைகள்: 6. Stations of the Cross - கடவுளே!!! இதென்ன சோதனை???


Stations of the Cross/ Kreuzweg/ Dietrich Brüggemann/ Germany/ 2014/ 107 min.

Stations of the Cross என்பது இயேசு கிறிஸ்து தம் மண்ணக வாழ்வின் இறுதி நாள்களில் துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த நிகழ்வுகளை நினைவுகூர்கின்ற வழிபாட்டுச் செயல் ஆகும். அதன் வழியே கதையின் முதன்மை பாத்திரமான மரியாவின் வாழ்வை, அவள் அன்றாடம் எதிர்கொள்ளும் சவால்களை பொட்டில் அறைந்தாற்போல் 14 காட்சிகள் சொல்கிறது இந்த ஜெர்மன் திரைப்படம்.

கடவுளின் வழியே பின்பற்றி வாழ்ந்து, அவரிடமே சரணடைய வேண்டும் என்ற முதன்மையான குறிக்கோளுடன் வாழும் 14-வயது பெண் மரியா. கத்தோலிக்கக் கிறித்தவ வழியை பின்பற்றும் குடும்பத்தில் வளர்ந்த அவள், உலகம் எவ்வளவு நாகரீகத்தை அடைந்தாலும் கடவுளை பின்பற்றுவதே தன் வாழ்வை அர்த்தபடுத்தும் என்ற குறிக்கோள் உடையவள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணுக்கு அவளின் நம்பிக்கையை சோதித்துப்பார்க்கும் சில சூழல் உருவாகிறது. அதை எப்படி அவளின் உணர்வால் எதிர்கொள்கிறாள் என்பதே மீதிக்கதை.

படத்தின் கருவாலும், அதை திரைக்கதையாகக் கோர்த்த விதத்தாலும் நம்மை முழுமையாக அதிரவைக்கிறது இந்த ஜெர்மன் திரைப்படம். முதல் காட்சியில் பேசப்படும் கலந்துரையாடல்தான் படத்தின் மைய்யக்கரு. அதை அடுத்தடுத்த காட்சிகளில் திரைக்கதையாக்கிய விதத்தில் இயக்குநரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் Best Script மற்றும் Prize of the Ecumenical Jury விருதுகளை இயக்குனருக்கு வென்று கொடுத்திருக்கிறது இந்த வலிமையான காவியம். திரைப்பட விழாக்களில் தவறவே விடக்கூடாத படங்களில் இதுவும் ஒன்று.

CIFF '14க்கான எனது பரிந்துரைகள்: 5. A Girl at My Door - யாரு அந்த குட்டிப்பொண்ணு???

http://asianwiki.com/images/c/c6/A_Girl_At_My_Door-p1.jpg

A Girl at My Door / Dohee-ya/ July Jung/ South Korea/ 2014/ 119 min
 
உலகசினிமா என்று பேச ஆரம்பித்தால் அதில் தென்கொரிய படங்கள் பற்றிய பேச்சு எழாமல் இருக்காது. வாயில் நுழையாத தென்கொரிய இயக்குனர்கள் பெயரை மனப்பாடமாக ஒப்பிக்கும் திரைப்பட வெறியர்கள் நம்மூரில் உண்டு என்றால் அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. அப்படிப்பட்ட கொரியாவில் அவர்களுக்கே உரித்தான விறுவிறுப்பில் 2014ல் வெளிவந்திருக்கும் மற்றொரு படம்தான் A Girl at My Door.

காவல்துறையின் இடமாற்றத்தால் ஒரு கடலோர கிராமத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிகொண்டு வருகிறாள் நம் கதையின் நாயகி. வந்த இடத்தில் ஒரு சிறுமியை தன் தந்தையும், பாட்டியும் துரத்தி துரத்தி அடிக்கபடுவதை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை அவளால் காண முடிகிறது. பொறுப்பான காவல் அதிகாரியாக அதை தட்டிக் கேட்க, அவளிடமே வந்து தஞ்சம் அடைகிறாள் அந்த சிறுமி. முதலில்

அதை மறுத்தாலும் அந்த சிறுமியின் மேலுள்ள பரிதாபத்தால் அவளை தன் வீட்டில் தங்க அனுமதிக்கிறாள் நாயகி. இதன்பின் அவள் எதிகொள்ளும் திருப்பங்கள்தான் விறுவிறுப்பான திரைக்கதை. கொரியப் படங்களுக்கே உண்டான அந்த மர்மமான சூழல் இந்தப் படத்திலும் உண்டு (உ.ம்: Memories of Murder [2003], Mother [2009]). அதுவே திரைக்கதையின் சுவாரசியத்திற்கு வலு சேர்க்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் "யார் இந்த சிறுமி? இவளை நம்பலாமா? இதில் யார் நல்லவங்க? யார் கெட்டவங்க?" என்ற பல கேள்வி நம்முள் எழ, அதுவே நம்மை படம் நெடுக ஒன்றவைக்கிறது. "எனக்கு விறுவிறுப்புதான் முக்கியம்" என்கிறவர் நீங்கள் என்றால், தவறவே விடக்கூடாத திரைப்படம் இது.

CIFF '14க்கான எனது பரிந்துரைகள்: 4. Natural Sciences - என் அப்பாவ பார்க்கணும்.

http://www.impawards.com/intl/argentina/2014/posters/ciencias_naturales.jpg

Natural Science / Ciencias naturales/ Matías Lucchesi/ Spanish / 2014/ 70 min.

ஒரு மென்மையான பயணத்தில் பங்கேற்க வேண்டுமா? இதோ இந்த ஸ்பானிஷ் திரைப்படத்தை பாருங்கள். பயணங்களை மையமாக கொண்ட திரைப்படங்களில் இது சற்றே மாறுபட்டது என்றே சொல்லலாம். இரண்டு, இரண்டரை மணி நேரம் என்று நீட்டி முழக்காமல் சொல்லவந்ததை ஒருமணி நேரத்திற்குள் மென்மையாக சொல்லிச் செல்கிறது இந்த அழகான ஸ்பானிஷ் திரைப்படம்.

அம்மாவின் துனையிலேயே வளர்ந்த லிலா (Lila) தனக்கான ஒரு வயதை நெருங்கும்போது தன் தந்தை யார் என தெரிந்து கொள்ளும் ஒரு ஆர்வம் அவளுள் முளைக்கிறது. இதனால் படிப்பில் கவனத்தை செலுத்த முடியாத லிலா, அம்மாவின் மறுப்பையும் மீறி, தான் நேசிக்கும் ஒரு ஆசிரியையின் உதவியுடன் தன் தந்தையை தேடும் நெடுதூர பயணத்தில் இறங்குகிறாள். தந்தையின் முகம், பெயர் எதுவும் தெரியாத பட்சத்தில் அவரை லிலாவால் சந்திக்க முடிந்ததா என்பதுதான் ஒருமணி நேரத்தில் அழாகாக சொல்லபட்டிருக்கும் Natural Sciences.

தந்தை-மகள் கதை என்றாலும் லிலாவுக்கும் அவள் உணர்வுகளை புரிந்துகொள்ளும் ஆசிரியைக்கும் இருக்கும் ஒரு மென்மையான உறவையும் அழகாக சொல்லத் தவறவில்லை இந்த திரைப்படம். 2014ல் வெளிவந்த இத்திரைப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான Grand Prix விருதை வென்றிருக்கிறது. இரண்டு குறும்படங்கள் எடுத்த இயக்குனர் Matías Lucchesiக்கு இது முதல் முழுநீள திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இவரின் அடுத்தடுத்த படங்களை நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம்.

CIFF '14க்கான எனது பரிந்துரைகள்: 3. The Winter Sleep - பேசும் ஓவியம்.

http://p4.img.cctvpic.com/photoworkspace/contentimg/2014/05/25/2014052507313358314.jpg

உலக சினிமாவே கதியென திரிபவர்களுக்கு Nuri Bilge Ceylan என்ற பெயர் கண்டிப்பாக அத்துப்படி. அவரின் சினிமா மொழியை அவரால் மட்டுமே போட்டி போட்டு வெல்ல முடியும். 1997ல் அவரின் The Town தொடங்கி 2011ல் அவரின் Once Upon a Time in Anatoliaவரை தன் ஒவ்வொரு படத்தையும் தனக்கான ஒரு திரை மொழியால் வசனங்கள், காட்சிகள், உணர்சிகள் மூலம் அட்டகாசமாக செதுக்கியிருப்பார்.

2014ல் வெளிவந்திருக்கும் அவரின் The Winter Sleep அதன் இன்னொரு உச்சம். Anatoliaவின் ஒரு மைய்யப் பகுதியில் வெளிநாட்டவர்கள் தங்கும் ஹோட்டல் நடத்தி வரும் Aydin, அவரின் மனைவி Nihal, அவரின் தங்கை Necla, மற்றும் அவர்களை சுற்றி இருக்கும் வெகுசில நெருங்கிய நண்பர்கள்தான் கதையின் முக்கிய பாத்திரங்கள். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை, வேறுபாடு, உள்ளுணர்வு, கோபம், அன்பு என அனைத்தையும் அவர்களுக்குள் நடக்கும் கலந்துரையாடலால் கவிதையாய் சொல்லியிருக்கிறது இந்த மூன்று மணிநேர திரைப்படம்.

இவரின் மற்ற படங்களை காட்டிலும் இது சற்றே நீளம்தான் என்றாலும், சற்றும் அலுக்காமல் படத்தை நகர்த்துகிறது அவர்களுக்கும் நடக்கும் அந்த உரையாடல்கள். வசங்கனங்கள் படத்தை ஒரு பக்கம் ஆட்கொண்டாலும், மறுபுறம் ஒளிப்பதிவால் நம்மை முழுமையாக வசீகரிக்கும் இத்திரைப்படம், 2014 கான்ஸ்ஸின் உயரிய விருதான தங்கப்பனை (Palme d'Or) விருதை Ceylanக்கு அள்ளி வழங்கியிருக்கிறது. திரைப்பட விழாக்களில் இதை வெண்திரையில் காணப்போகும் அனைவரும் நிச்சயம் அதிர்ஷ்டசாலிகள் என்றே சொல்லலாம்.

CIFF '14க்கான எனது பரிந்துரைகள்: 2. Two Days, One Night. - வாழ்க்கைக்கான ஒரு பயணம்.http://images.mymovies.net/images/film/cin/350x522/fid13933.jpg

Two days, One night / Belgium/ Dominique Deruddere/ 95’/ 2014
 
ஹாலிவுட் படம் பார்ப்பவர்களுக்கு Marion Cotillard என்ற பெயர் பரிச்சயமாகி இருக்கும். அதிலும் Inception, Dark Knight Rises போன்ற படங்களில் சுலபமாக அடையாளம் காணக் கூடிய நடிகை. ஆனால், அவர் நடிப்பில் ஓர் உச்சத்துக்கே சென்றது 2007-ல் வெளியான La Vie en Rose என்ற பிரெஞ்சு படத்தில். பிரபல பிரெஞ்சு பாடகி Edith Piaf வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட அந்தப் படத்தில் தன் அசத்தலான நடிப்பால் Edith Piaf-ஐ நம் கண்முன் நிறுத்தியிருப்பார் Marion Cotillard. அந்த வரிசையில் தன் நடிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கும் மற்றொரு French/Belgium படம்தான் 2014-ல் வெளியான Two Days, One Night. 

உடல்நிலை குறைவால் வேலையிலிருந்து விடுப்பு எடுத்திருக்கும் நாயகி, குடும்பச் சூழ்நிலையால் மறுபடியும் வேலையில் உடனே சேர வேண்டிய கட்டாயம். ஆனால், தான் வேலையில் சேர, தன் சக ஊழியர்களிடம் ஓர் உதவியை நாட வேண்டும். அதுவும் சனி, ஞாயிறு என்ற இரண்டே நாட்களில். அந்த உதவியை இவளுக்காக மற்றவர்கள் செய்ய முற்பட்டாலும், அவர்களின் குடும்ப சூழ்நிலையால் அதைச் செய்ய அவர்களுக்குள் ஒரு தயக்கம். அப்படி என்ன பொல்லாத உதவி? எத்தனை பேர் அதை செய்தார்கள்? அவளுக்கு வேலை கிடைத்ததா? என்பதுதான் 90 நிமிடங்களில் நமக்கு கூறப்படும் படத்தின் சுவாரசியமான திரைக்கதை. 

Marion Cotillard மட்டுமல்லாது அவரின் கணவாக வருபவர், சக ஊழியர்களாக வருபவர்கள் என அனைவரும் அத்தனை இயல்பான நடிப்பால் நம் மனதில் தங்குகிறார்கள். ஒரு மென்மையான வாழ்கையை காணவேண்டும் என்றால் இது உங்களுக்கான ஒரு உலக சினிமா. 2014 கான்ஸில் தங்கப்பனை (Palme d'Or) விருதுக்காக படத்தின் இயக்குனர்களான Jean-Pierre Dardenne மற்றும் Luc Dardenne பரிந்துரைக்கப்பட்டார்கள். (நாம் அறிந்த Coen Brothers, Nolan Brothers போல உலக சினிமாவில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க 'சகோதர' இயக்குனர்கள் இவர்கள்).

CIFF '14க்கான எனது பரிந்துரைகள்: 1. Leviathan: ஒரு ரஷ்ய காவியம்.

Inline image 1 


Leviathan / Leviafan / Andrey Zvyaginstev / Russia / 2014 / 140'
 
சமகால ரஷ்ய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் Andrey Zvyagintsev. அவரது The Return (2003) அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. திடீரென தேடிவரும் தந்தைக்கும் இரண்டு மகன்களுக்கும் உண்டான இறுக்கத்தை வசனங்களை குறைத்து உணர்வுகள் மூலகமாக கோர்த்திருப்பார். 

இந்த ஆண்டு வெளியான அவரது Leviathan-வில் வேறொரு குடும்பச் சூழழை ஆழமாக கையாண்டிருக்கிறார். நிலப் பிரச்சனையில் ஊர் மேயரை சமாளிக்க தன் நெருங்கிய 'வழக்கறிஞர்' நண்பனை அழைக்கிறான் கதையின் நாயகன். வழக்கை ஒருபுறம் சமாளிக்க போராடும்போது, மறுபுறம் மற்ற பிரச்சனைகள் உருவெடுக்கிறது. அந்த இடத்தில் நட்பு, குடும்பம், பாசம் என அனைத்தும் ஒன்றையொன்று மோதிக்கொள்ள, விளைவுகளை திரைக்கதையில் புரட்டி போட்டிருக்கிறார் இயக்குனர் Zvyagintsev. 

தனது படங்களுக்கே உரித்தான காலநிலை (Climate) இந்தப் படத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. 2014 கான்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதை இப்படத்துக்காக Zvyagintsev, அவரின் நெருங்கிய திரைக்கதை அமைப்பாளர் Oleg Negin ஆகியோர் கூட்டாக பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.