Saturday, October 29, 2011

போஸ்ட்மென் இன் தி மௌண்டைன்ஸ் (2002)


வாழ்கையின் போதிய நாட்கள் முழுக்க தபால்காறராக வேலைபார்த்த தந்தை, ஒய்வு பெற வேண்டிய கட்டாயத்தால் தன் மகனிடம் அந்த வேலையே தொடருமாறு கேட்கிறார். அதுவரை தன் மனம்போல் மகிழ்ச்சியாக வாழ்ந்த மகன் திடீரென்று வேலை செய்ய சொல்லி தந்தை வேண்டுவதால் வேண்டா வெறுப்பாக ஒப்புகொள்கிறான். பக்கத்து மலைகளில் வாழும் மக்களுக்கு தபால்களை சேர்க்க வேண்டும். மகனுக்கு பழக்கமற்ற வேலையாக இருப்பதால் தந்தை முதல்நாள் மகனுடன் துணைக்கு வருகிறார். தான் பிறந்தது முதல் அதுவரை தந்தை செய்யும் வேலை எப்படிப்பட்டது என்று தெரிந்திராத மகன் அதன் வலியை முதல் நாளே உணருகிறான். கரடுமுரடான மலைப்பாதைகளில் நடந்து செல்லவேண்டும். இத்தனை வருடமாக தந்தை இப்பாதைகளை தான் கடந்து சென்றாரா என்று நினைக்கும் மகனுக்கு தந்தை மேல் பரிதாபம் ஏற்படுகிறது. தந்தை இத்தனை வருடமாக பட்ட வலியை தான் உணராமல் இருந்ததை நினைத்து மகனுக்கு அவன் மேல் கோபம் வருகிறது. ஆனால் இத்தனை ரணமான வேலையே தந்தை செய்தாலும், அவர் தபால்களை கொண்டுசேர்க்கும் கிராமத்தில் வாழும் மக்கள் தந்தை மீது வைத்திருக்கும் மரியாதையை கண்டு வியக்கிறான். அவரை ஒரு நண்பராக, தந்தையாக, மகனாக கருதி அந்தந்த வயது மக்கள் பழகுவதை கண்டு மகனுக்கு தந்தையின் மதிப்பு புரிகிறது. வெளிக்காட்ட முடியாத ஒரு அன்பும், மரியாதையும் தந்தை மேல் வருகிறது. இப்படிப்பட்ட ஒரு மனிதர் இத்தனை வருடமாக தன்னை வருத்திக்கொண்டு குடும்பத்திற்காக உழைத்ததால் இனி வீட்டில் ஒய்வெடுத்து தாயுடன் இனி வரும் நாட்களை நிம்மதியாக வாழவேண்டும் என்பதை உணரும் மகன் முழுமனதுடன் தந்தையின் பணியை தொடருவதாக படம் முடிகிறது.

தந்தை மீது அன்புள்ள எவர் இந்த படத்தை பார்த்தாலும் கண்டிப்பாக அவர்களை அறியாமல் ஒரு துளி கண்ணீராவது விடுவர். தன் தந்தை தனக்காக எப்படி உழைக்கிறார் என்பதை உணர்வர். அத்தனை உணர்வுபூர்வமான சீன படம். இசையும், பனிபடர்ந்த மலைசார்ந்த சூழலும் படத்தை ஒரு மென்மையான உணர்வோடு கொண்டுசெல்கிறது. ஜியாங்கி ஹுவா(Jianqi Huo) என்ற சீன இயக்குனர் இந்த உணர்வுபூர்வமான தந்தை காவியத்தை இயக்கியுள்ளார்.

Tuesday, October 4, 2011

சைத்தான் (ஹிந்தி - 2011)


சமீபத்தில் ஹிந்தியில் வெளியான "சைத்தான்" மனிதர்களின் ஆழ்மனநிலையை மையமாக கொண்ட திகில் திரைப்படம். இறந்து போன அம்மாவின் நினைவால் ஏங்குகிறாள் அம்ரிதா. அதுவே அவளின் தந்தைமேலும், தந்தை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட சித்தியின் மீதும் அவளுக்கு வெறுப்பை உண்டாகுகிறது. எதற்சையாக சந்திக்கும் நண்பர்களான நான்குபேருடன்(3 ஆண்கள், 1 பெண்) இவளும் இணைகிறாள். ஏற்கனவே அந்த நான்குபேரும் குடி, கும்மாளம், போதைசுகம் போன்றவற்றிற்கு அடிமையானவர்கள். அவர்களின் நட்பு வட்டாரம் அம்ரிதாவுக்கு பிடித்துப்போகிறது. இவளும் அவர்களின் பழக்கங்களுக்கு அடிமையாகிறாள். இப்படியிருக்க ஒரு நாள், போதையின் உச்சத்தில் இவர்களுடன் காரை ஓட்டி செல்லும் நண்பன் கட்டுபாடின்றி ரோட்டோரத்தில் நடந்து சென்ற இருவர் மீது காரை ஏற்றி கொன்றுவிடுகிறான். போலீசுக்கும் தெரியவர ஒரு தப்பை மறைக்க இவர்கள் மென்மேலும் செய்யும் தப்புகளால் இவர்களை உடனடியாக பிடிக்கவேண்டும் என்று போலீஸ் கட்டங்கட்டி துரத்துகிறார்கள். கடைசியில் இந்த ஐவரின் ஆழ்மனதில் இருக்கும் சைத்தான் வெளிவந்து இவர்களுக்கான முடிவை தேடித்தருகிறது. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இசை படத்தின் அசைக்க முடியாத பலம். பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப்(Anurag Kashyap) தயாரிக்க, அறிமுக இயக்குனர் பெஜோய் நம்பியார்(Bejoy Nambiar) (இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்) இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் விறுவிறுப்பும், கதாபாத்திரங்களின் வேறுபாடும் படத்தை தனித்து காட்டுகிறது. சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.

Monday, October 3, 2011

காமோஷ் பாணி (2003)


ஒரு அமைதியான அதே சமயம் அச்சமூட்டுகிற ஒரு பாகிஸ்தானிய கதை இந்த "காமோஷ் பாணி". பாகிஸ்தானின் ஒரு கிராமத்தில் தாயும் மகனும் வாழ்கின்றனர். மகன் அங்கிருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணை காதலிக்கிறான். வாழ்கை அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் அவன் நண்பர்கள் மூலம் புரட்சிப்படையில் அயிக்கியமாகி அவர்களின் கொள்கைகளினாலும் கோட்பாடுகளினாலும் சாதி வேறுபாடு, உயர்ந்தவர் யார், தாழ்தவர் யார் என்று அவர்கள் எடுத்துரைக்கும் வேறுபாட்டால் மாற்றம் அடைகிறான். அந்த மாற்றத்தின் விழைவாக வேற்று சாதியை விரட்ட அந்த புரட்சிப்படையுடன் கைக்கொற்கிறான். அந்த படையும் அவர்களின் கொள்கையும் இவனுக்கு தன் தாய், காதலியை விட மதிப்புமிக்கதாக மனதில் வலுக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் தன் தாயை பற்றி அவனுக்கு சிறுவயதிலிருந்து தெரியாத ஒரு ரகசியம் இவனுக்கு தெரிய வருகிறது. அந்த ரகசியம் அவன் எதை எதிர்த்து புரட்சி செய்கிறானோ அதாகவே இருக்கிறது. இதனால் கொள்கையா, குடும்பமா என்ற இரண்டு முரண்களுக்குள் சிக்கிக்கொள்ளும் அவன் எதிர்கொள்ளும் திருப்பங்களும், இழப்புகளும் படத்தின் இறுதிக்கட்டம். படத்தில் சிறப்பம்சம் என்னவென்றால், இரண்டு சாதிகளும், சாதியர்களையும் படம் சித்தரித்தாலும், நம்மால் ஒரு சாதியை போற்றவோ இன்னொரு சாதியை தூற்றவோ தோனாது. அவ்வகையில் இரண்டையும் அதுஅதன் பாணியில் நியாயப்படுத்தியிருப்பார் இயக்குனர்.

அறிமுக பெண் இயக்குனர் சபிஹா சுமார்(Sabiha Sumar) 1979ல் பாகிஸ்தானில் நடந்த சாதி வேறுபாட்டு பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

இத்திரைப்படம் சிறந்த இயக்கம், சிறந்த நடிகை, சிறந்த படம் ஆகிய பிரிவின் கீழ் பல விருதுகளை சர்வதேச திரைப்பட விழாக்களில் வென்று பாரட்டுகளை பெற்றுள்ளது.