Tuesday, September 20, 2011

ரன் லோலா ரன் (1998)


ஒரு ரெயிலையோ, பேருந்தையோ நிமிட இடைவெளியில் தவறவிட்டால் "அடடா.. ஒரு நிமிஷம் முன்னாடி வந்திருந்தா பிடிச்சிருக்கலாமே" என்று மனதில் தோன்றும். அதே சமயம் பேருந்தை பிடித்திருந்தால் இந்நேரம் எங்கு சென்று கொண்டிருப்போம் என்றும் ஒரு கற்பனை நம்முள் ஓடும். இந்த ஜேர்மன் திரைப்படமும் அதுபோன்ற ஒரு 20நிமிட சூழ்நிழையில் ஏற்படும் கணநேர இடைவெளியின் மாற்றங்களை மூன்று விதமாக வேறுபடுத்தி காட்டுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் கொண்டுசேர்க்க வேண்டிய பணத்தை உள்ளூர் ரெயிலில் வரும்போது தவற விடுகிறான் காதலன். வேறு வழியின்றி காதலியிடம் தனக்கு உதவுமாறு கேட்கிறான். அதுவும் 20நிமிடத்தில். இல்லையெனில் பக்கத்தில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதுதான் அவனது ஒரே வழி என்று கூறுகிறான். பிரச்சனையை பெரிதாக்க கூடாதென்றும், காதலனின் உயிருக்கு ஆபத்து வந்துவிட கூடாதென்றும் எண்ணி முயற்சியில் இறங்குகிறாள் காதலி. அவள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் 20நிமிடத்திற்குள் நடக்கிறது. ஆனால் ஒரு 20நிமிடம் அல்ல மூன்று 20நிமிடங்கள். 20 நிமிடத்தில் அவள் எடுக்கும் முயற்சிகள் மிக மெதுவாக(Dead Slow), மெதுவாக(Slow), விரைவாக(Fast) என்று மூன்று விதங்களில் கணநேர இடைவெளியின் மாற்றங்களை துல்லியமாக வேறுபடுத்துகிறது திரைக்கதையும், படத்தொகுப்பும். அதற்கு தகுந்தாற்போல் இசையும் ஒவ்வொரு நொடியின் தாமதத்தையும், அதன் விறுவிறுப்பையும் பார்க்கும் நம்மக்குள்ளும் ஏற்படுத்துகிறது. நாம் 1மணி21நிமிடங்கள் படத்தை பார்த்தாலும் அது வெறும் 20 நிமிடம்தான் என்பதை உறுதி செய்துகொள்வதில் எந்த மறுப்பும் இல்லை. டாம் டிக்வேர்(Tom Tykwer) இந்த புதிர் போடும் ஜேர்மன் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

Sunday, September 18, 2011

அலாமார் (2009)


இந்த படம் ஒரு தாய், மகனின் பாசமாக ஆரம்பமாகி கடல் ஆழம் சார்ந்த பயணமாக தொடர்ந்து பிறகு தந்தை மகனின் பிரியா விடையாக முடிகிறது. பிரிந்த ஒரு கணவன் மனைவி தங்களது பாசத்தை தங்கள் ஒரே ஒரு மகன் மேல் பொதுவாக பொழிகிறார்கள். மகன் விடுமுறை நாளை கழிக்க கடலில் மீன்பிடி தொழிலில் இருக்கும் அப்பாவிடம் அனுப்பிவைக்கிறாள் அம்மா. அப்பாவுடன் விடுமுறை நாட்களை கழிக்கும் மகன் பல புதுமையான கடல் அனுபவங்களை பெறுகிறான். பல வகையான மீன்கள், கடல் இனங்களை காண்கிறான். அவன் எதிர்பார்க்காத பலவித அனுபவங்கள் அவன் தந்தையுடன் இருக்கும்போது கிடைக்கிறது. பிறகு விடுமுறை முடியும்போது தந்தைக்கு விடை கொடுத்து விட்டு தாயுடன் பழைய வாழ்கையை தொடர செல்லுவதாக படம் முடிகிறது. கதை என்று குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு ஒன்றும் இல்லை. ஆனால் கடலில் தந்தையும் மகனும் பயணம் செய்யும்போது நாமும் அவர்களுடன் செல்வது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது. தந்தையும் மகனும் பிரியும் இடத்தில் நமக்கும் ஒரு பாரமான உணர்வை ஏற்படுத்துகிறது இந்த அழகான அமைதியான ஸ்பானிஷ் திரைப்படம்.

பெட்ரோ கொன்சாலெஸ் ரூபியோ(Pedro González-Rubio) என்ற மெக்ஸிகன் இயக்குனர் இந்த படத்தை இயக்கியுள்ளார். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த படம், இயக்குனருக்கான விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது இந்த ஸ்பானிஷ் திரைப்படம்.

Saturday, September 17, 2011

ஒசாமா (2003)


அப்போது ஆப்கானிஸ்தான் தாலிபானிடம் அடிமை பட்டிருந்தது. தாலிபானியர்கள் போடும் விதிகளையும் விதிமுறைகளையும் ஆப்கான் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந்தனர். குறிப்பாக ஆண் துணை இல்லாத பெண்கள் மீது நடவடிக்கை அதிகமாகவே இருக்கிறது. அவர்கள் வேலை செய்து சம்பாதிக்க அனுமதி இல்லை. இப்படியிருக்க அங்கு ஒரு குடும்பத்தில் பாட்டி, அம்மா மற்றும் ஒரு 13வயது சிறுமி வாழ்கின்றனர். தாத்தாவும், அப்பாவும் முன்நிகழ்ந்த ஆப்கான் போரில் இறந்ததனால் இவர்கள் இப்போது தனிமை நிலையில் வாழ்கின்றனர். அம்மா தன்னால் முடிந்த வரை வெளியில் வேலை செய்து பணம் ஈட்டுகிறாள். ஆனால் தாளிபானியர்களின் கொடுமைக்கு பயந்தே அவளால் வேளைக்கு செல்லமுடியவில்லை. பிறகு பாட்டியின் யோசனையின் பேரில் ஒரு ஏமாற்று வேளையில் துணிந்து இறங்குகிறாள் அம்மா. தன் 13வயது மகளுக்கு ஆண் வேடமிட்டு பக்கத்து தெருவில் இருக்கும் ஒரு தேனீர் விடுதியில் வேலைக்கு சேர்த்து விடுகிறாள். பார்க்க ஆண் போலவே தோற்றமளித்தாலும் இது தாலிபானியர்களுக்கு தெரிந்தால் விளைவு அந்த சிறுமிக்கு பெரும் ஆபத்தாக நேரும். இருந்தாலும் கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு மகளை அனுப்பிவிடுகிறாள். ஆனால் சிறுவர்கள் கட்டாயம் பள்ளிக்கு செல்லவேண்டும் என்ற விதிமுறையின்படி "ஒசாமா" என்ற பெயரில் அவள் மற்ற சிறுவர்களோடு சிறுவர்களாய் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். ஆனால் பெண்ணாக தன்னால் ஆண் சிறுவர்கள் செய்யும் அனைத்தையும் செய்ய முடியவில்லை. இது அங்கிருப்பவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பிறகு இவள் ஆண்வேடமிட்ட பெண் என்பதும் தெரியவருகிறது. இதனால் அவள் பெண் என்பதையும் மறுத்து தாலிபாநியர்களால் தண்டிக்கபட்டு ஒரு கோரமான நிலைக்கு தள்ளபடுவதாக படம் முடிகிறது. இஸ்லாமிய நாடுகளில் ஆணாதிக்கமும் அடிமைத்தனமும் பெண்களை எந்த நிலைக்கு உள்ளாகுகிறது என்பதை யதார்த்தமாக, அதே சமயம் பகிரங்கமான உண்மையாக போட்டு உடைக்கிறது இந்த படம். ஒரு பெண்ணின் நிலைமையை மேம்படுத்தி காட்டினாலும் அங்கிருக்கும் பெண்கள் அனைவருக்கும் என்றோ ஒரு நாள் இது நேரும் இன்பதை உணர்த்துகிறது.

சித்திக் பர்மாக்(Siddiq Barmak) இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். 2004ன் சிறந்த வெளிநாட்டு படத்திற்காக கோல்டன் க்ளோப் விருதையும், 2003ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் கேமரா விருதையும், இன்னும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டையும் விருதுகளையும் வென்றுள்ளது இந்த ஆப்கான் திரைப்படம்.

Wednesday, September 14, 2011

தி எலைட் ஸ்குவாட்(2007)


ஆஸ்திரேலியாவில் உள்ள ரியோ எனும் நகரத்தில் வெறித்தனமான போதைக்கு அடிமையான ஒரு கும்பல் இருக்கிறது. துப்பாக்கி சத்தம், ரத்த கரை, கொலை, கொள்ளை என்பது சர்வ சாதாரணம். அங்குள்ள பாவப்பட்ட மக்களை இந்த கும்பலிடமிருந்து காப்பாற்ற ஒரு காவலர் குழு. மக்களை காப்பதை தவிர அந்த கொலைகார கும்பலிடம் எந்த விதத்திலும் இந்த குழுவுக்கு உரசல் இல்லை. சண்டையோ, உரசலோ இல்லாத போதும் இந்த கும்பலின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று கோபத்துடன் அமைதியாக காத்து கொண்டிருக்கிறது காவலர் குழு. ஆனால் இவர்களின் பலத்தை பற்றி புரியாமலும், சற்றும் எதிர்பாராமலும் இவர்களை சீண்டி பார்கிறது அந்த கும்பல். கனியாக கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் அந்த கும்பலின் கொட்டத்தை அடக்க அதிரடியாக களத்தில் இறங்குகிறது காவலர் குழு. வெற்றியும் காண்கிறது. பிறகு ஓய்வில்லாமல் அடுத்த கட்ட பாதுகாப்புக்கும், மோதலுக்கும் தயாராகிறது இந்த காவலர் குழு. "சிட்டி ஆப் காட்" படத்தின் கதாசிரியரின் மற்றொரு அதிரடியான, அதே சமயத்தில் உணர்வு பூர்வமான காவலர்கள் பற்றிய படம்.

Tuesday, September 13, 2011

தி ரன்னர் (1990)


இந்த படத்தை பார்க்கும் பொழுது நான் ஒரு திரைப்படத்தை பார்க்கிறேன் என்ற உணர்வு ஆரம்பம் முதல் கடைசி வரை இல்லை. அத்தனை யதார்த்தமாக ஒரு அனாதை சிறுவனின் அன்றாட வாழ்க்கையை பதிவு செய்துள்ளது இந்த ஈரானிய படம். கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிறுவன் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறான் என்று சொல்லலாம். அத்தனை உண்மையான நடிப்பு. நம்மூரில் எடுக்கும் சில படங்களுக்கு அத்தனை செலவு செய்து வெறும் நாடகத்தனமான நடிப்பை படமாக்கி நமக்கு காட்டும்பொழுது இது போன்ற சில அரிதான உலக படங்களின் மதிப்பு நமக்கு புரிகிறது. படத்தின் முடிவு அந்த சிறுவனின் வாழ்கைக்கு ஒரு நல்ல வழியை வகுப்பதாகவோ, அல்லது அவனின் வறுமைக்கு ஒரு தீர்வு கிடைப்பதாகவோ இல்லை. ஆனால் அந்த வாழ்கை வாழும்போதும் அவன் மனதளவில் ஒரு சிகரத்தை எட்டுவதாக கட்டப்பட்டு அந்த கதாபாத்திரத்துக்கும், படம் பார்பவர்களுக்கும் ஒரு திருப்தி ஏற்படுத்தும் விதமாக நிறைவடைகிறது. ஈரானிய இயக்குனரான அமீர் நடேரி இந்த 1 ½ மணி நேர வாழ்கையை பதிவு செய்துள்ளார். கண்டுபிடிப்பதற்கு மிக மிகவும் அரிதான ஒரு படம் இது.

தி ஸாங் ஆப் ஸ்பேரோஸ் (2008)


"சில்றன் ஆப் ஹெவான்(Children of Heaven)" படத்திற்காக 1999ல் ஆஸ்கார்க்கு பரிந்துரைக்க பட்ட ஈரானிய இயக்குனர் மஜீத் மஜீதி(Majid Majidi) 2008ல் எடுத்த மற்றொரு படைப்பு "தி ஸாங் ஆப் ஸ்பேரோஸ்(The Song of Sparrows". ஒரு ஏழை குடும்ப தலைவனின் குடும்பத்தை காக்க ஒவ்வொரு நாளும் படும் போராட்டமே "தி ஸாங் ஆப் ஸ்பேரோஸ்". நெருப்பு கோழி பண்ணையில் வேலை பார்க்கும் அவன், ஒரு கோழியை கூண்டிலிருந்து தப்ப விட்டதனால் வேலையிலிருந்து வெளியேற்ற படுகிறான். அந்த நேரத்தில், காது கேட்காத தன் மகளின் காதில் மாட்டும் கருவி பழுதானதால் அதை செரி செய்ய பணம் கொஞ்சம் தேவை படுகிறது. வேறு வேலை தேடி அலையும் அவனுக்கு, அதிர்ஷ்டவசமாக அவன் மோட்டார் சைக்கிளை "டாக்ஸி"யாக ஓட்டும் வேலை கிடைக்கிறது. இன்னொருபுறம் ஒரு பெரிய கட்டடத்தின் வெளியில் கிடக்கும் தேவையற்ற தட்டு முட்டு சாமான்களை வீட்டிற்கு எடுத்து வந்து அதை பழுதுபார்த்து விற்கிறான். இன்னும் சிறிய சிறிய பல வேலைகளை பார்த்து பணத்தை சிறுக சிறுக சேமித்து குடும்பத்தை நடத்துகிறான். இப்படியாக அவன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனை, நம்பிக்கை, போட்டிகளை மிக யதார்த்தமாக் பதிவு செய்கிறது இந்த படம். பிழைத்தே ஆக வேண்டும் என்ற நிலை வரும்போது மனிதன் எப்பேர்பட்ட முயற்சியும் எடுப்பான் என்பதை வார்த்தைகளை விட காட்சிகளின் வாயிலாகவே சொல்லியிருக்கிறார் மஜீத் மஜிதி. கதாபாத்திரங்கள் அனைத்தும் அத்தனை யதார்த்தமாக பிரதிபலிக்கிறது. ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றதுபோல் ஈரானின் வறண்ட சூழலை காட்சிபடுத்துகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஒரு நீல நிற கதைவை கருப்பான வலைநிலத்தை கடந்து எடுத்து செல்லும் காட்சி மிக அழகானது. வீட்டில் மூடப்பட்ட ஜன்னல்களால் வெளியே செல்ல முடியாத குருவியை திறந்து வெளியே விடுவிக்கும் காட்சியில் மனித மனம் சோகம், கவலை என்ற கூண்டுக்குள் அடங்கிவிட கூடாது என்பதை வசனங்கள் இல்லாமல் விவரித்து இருக்கும் இறுதி காட்சி மஜீத் மஜிதியின் படைப்பு திறனை நமக்கு பிரதிபலிக்கும்.

பெர்லின் திரைப்பட விழா, fajr திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் விருதுகளை பெற்றுள்ளது.

Thursday, September 8, 2011

ரசனை மாற்றம்!


இது என் சொந்தக் கட்டுரை அல்ல. ஒளிப்பதிவாளர் திரு. செழியன் ஆனந்த விகடனில் எழுதிய உலக சினிமா தொடர், புத்தகமாக விகடன் பிரசுரம் வெளியிட்டது. உலகின் வெவ்வேறு நாடுகளில் எடுக்கப்படும் படங்களில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து அதனை எழுத்துனடையாக விவரித்து அதில் எழுதியுள்ளார். ஒவ்வொரு பதிப்பிலும் 30 படங்களாக முதல் மற்றும் இரண்டாம் பதிப்பு 2010லும், இப்போது மூன்றாம் பதிப்பு 2011லும் வெளியாகி உள்ளது. உலக சினிமாக்களில் என் பார்வை திரும்பியது அந்த புத்தகங்களின் வாயிலால்தான். திரைப்படங்கள் மீது ஒரு தேர்ந்த ரசனை எனக்கு வருவதற்கும் இந்த புத்தகங்கள்தான் வழிவகுத்தன. அதற்கு செழியன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த புத்தகத்தில் அவர் "ரசனை மாற்றம்" என்ற தலைப்பின் கீழ் எழுதிய முன்னுரை பகுதியை இங்கே எழுதியுள்ளேன். இதை படிப்பவர்களுக்கு இந்த முன்னுரையே உலக சினிமாவின் மதிப்பை உணர்த்தும் என்றும், அதன் வாயிலாக அவர்களின் ரசனை மாறும் என்ற நம்பிக்கையோடும் எழுதுகிறேன்.

"ஒரு நல்ல திரைப்படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்?
திரைப்படம் என்பது, வெறும் பொழுதுபோக்கு சாதனம் மட்டும் அல்ல. அது நம்மை சிரிக்கவைக்கிற, அழவைக்கிற, சிந்திக்கவைக்கிற, உணர்வுகளை மிக நெருக்கமாக பரிமாறிக்கொள்கிற வலிமையான தொடர்பு சாதனமாகவும் இருக்கிறது. ஆனால், நாம் பார்க்கிற திரைப்படங்கள் என்ன விதமான உணர்வுகளுடன் நம்மை தொடர்புகொள்கின்றன?

குடும்பத்துடன் உணவுவிடுதிக்கு செல்கிறோம். அங்கு இருக்கும் எல்லா உணவையும் குழந்தைகளுக்கு நாம் அனுமதிப்பதில்லை. 'அவர்களுக்கு ஏற்றது எது?' என்பது நமக்கு முதலில் தெரியும் என்பதால், அங்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஒரு திரையரங்கத்துக்கு செல்கிறோம். அங்கு நடப்பது என்ன படம்? என்ன கதை?. திரையில் நடக்கிற வன்முறையையும், வயதுக்கு மீறிய காட்சிகளையும் குழந்தைகளுடன் பார்க்கிறோம். திரையரங்கை நாம் தவிர்த்தாலும் தொலைக்காட்சி இருக்கிறது. இணையம் இருக்கிறது. தவிர்க்கமுடியாமல், காட்சிகளாக நம்மைச்சுற்றி நிகழும் இந்த சாதனங்களில்
இருந்து தேவையானதை, சிறந்ததை நாம் தேர்வு செய்வது எப்படி?

சுற்றுச்சூழல் மாசு அடைவது குறித்து உணர துவங்கியிருக்கிற நாம், தினமும் காட்சி ரீதியாக மனதுக்குள் படித்துகொண்டிருக்கும் மாசு குறித்த விழிப்புணர்வை அடைந்து இருக்கிறோமா? தவறுதலாக நாம் எடுத்துக்கொள்ளும் மோசமான ஓர் உணவு, அதிகபட்சம் இரண்டு நாளுக்கு நமக்கு தொந்தரவாக இருக்கலாம். ஆனால், வெறும் பொழுதுபோக்குதானே என்று நினைத்து தொடர்ச்சியாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் தவறான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், மெது விஷம்(slow poison) போல முழு வாழ்க்கைக்குமான நம் இயல்பையே மாற்ற துவங்குகின்றன.

'இருட்டைப் பற்றி புலம்புவதைவிட ஒரு விளக்கை ஏற்றி வையுங்கள்' என்றொரு பழமொழி இருக்கிறது. தவறான படங்களை பற்றி வருந்துவதைவிட நல்ல படங்களை அறிமுகப்படுத்துவதே சிறந்தது. அந்த வகையில் உலகெங்கும் எடுக்கப்பட்ட நல்ல படங்களை தேடிப் பார்பதன் மூலம் மோசமான திரைப்படத்தை மட்டுமல்ல, நல்லவை என்ற போர்வையில் இருக்கும் போலிகளையும் நாம் அடையாளம் காணமுடியும். அதற்கு ஒரே வழி உலகின் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்துப் பார்பதுதான். அதன்மூலம் குடும்பத்திலும் நம் நண்பர்கள் மத்தியிலும் ஒரு மாற்று ரசனையை ஏற்படுத்த முடியும்.

சூழல் மாசுபடுவதை தடுக்க, மரம் வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதுபோல, காட்சி ரீதியாக மாசுபடுவதை தடுக்க, குறைந்தது இருபது சிறந்த உலகப்படங்களையவது நாம் பார்த்திருக்க வேண்டும். எளிமையான திரைப்பட நூலகத்தை வீட்டில் அமைப்பதன் மூலம், குழந்தை பருவத்திலேயே நல்ல திரைப்படங்களை அறிமுகம் செய்துவைக்க வேண்டும். ஊருக்கொரு திரைப்பட சங்கத்தை ஏற்படுத்தலாம். திருமணங்களில், விழாக்களில் சிறந்த படங்களின் குறுந்தகடுகளை பரிசளிக்கலாம்.

'உணவு பழக்கத்திலிருந்து ஒழுக்க விதிகள் வரை எது சிறந்தது?' என்று கற்றுத்தருகிறது நமது கலாசாரம். ஆனால், அந்த கலாசாரத்தையே பாதிக்கிற திரைப்படத்தில் எது சிறந்தது என்று நாம் கற்றுக்கொள்ளாமல் இருப்பது எவ்வளவு ஆபத்தானது! அந்த வகையில் சிறந்த படங்களை அறிமுகப்படுத்தும் வழியாக, ரசனை மாற்றத்தை துவக்கிவைக்க இந்த நூல் உதவும் என்று நான் நம்புகிறேன். - அன்புடன் செழியன்."