Tuesday, July 19, 2011

நந்தலாலா - கல்லடி பட்ட மரம்

சமீபத்தில் வெளியான தெய்வதிருமகள் படத்தை முதல் நாளே சென்று பார்த்தேன். படம் வெளியாவதற்கு முன்பே அது "ஐ யம் சாம்"(i am sam) என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று தெரிந்துவிட்டது. படத்தை பார்க்கும்போதும் அது தெரிந்தது. நடிப்பு முதற்கொண்டு ஐ யம் சாம்மிலிருந்து தழுவபட்டாலும் விக்ரமின் நடிப்பு எனக்கு பிடித்தது. தமிழ் படத்திற்கான சில மாற்றங்களும், நாடகத்தனமும் தென்பட்டாலும் கதையின் கரு ஒன்றே என்பது அப்பட்டமாக தென்பட்டது. ஆனால் படத்திற்கு அமோக வரவேற்பு. வயிறு குலுங்க சிரித்தும், இறுதிகாட்சியில் அழுதும் ரசிகர்கள் படத்தை பார்த்ததை திரையரங்கில் காண முடிந்தது. அப்போது தான் ஒரு பிரபல, திறமையான, ரசிகர்களின் ஆதரவு இருக்கும் நடிகனை வைத்து எந்த மொழி படத்தை தழுவி தமிழில் எடுத்தாலும் படம் வெற்றி தான் என்று எனக்கு புரிந்தது...

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், கடந்த வருடம் ஒரு படம் வெளியாகி 14நாட்களில் தமிழ்நாட்டில் அத்தனை திரையரங்கிலும் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்டது. இன்றுவரை ப்படி ஒரு படம் வந்ததாகவும் அதில் நடித்தது படத்தின் இயக்குனர் என்பதும் பல பேருக்கு தெரியாது என்பது கொடுமையான விஷயம். அந்த படத்தின் பெயர் "நந்தலாலா". படம் வெளியாவதற்கு முன்பே அது ஜப்பானிய படமான "கிகுஜிரோ" என்ற படத்தின் தழுவல் என கூறப்பட்டது. அப்போது ஆரம்பமானது படம் வெளியாகி அது திரையரங்கில் இருந்து வெளியேறும் வரை அதே புராணம். "அது காப்பி அடிச்ச படம் யா.. ஹீரோ வேற பாக்க நல்லவே இல்ல", "இவங்களுக்கெல்லாம் காப்பி அடிக்றத தவிர ஒன்னுமே தெரியாது" என்று இன்னும் பல பழந்தின்னு கொட்டை போட்டவர்களின் கருத்துகள். ஆனால் எத்தனையோ படங்களுக்கு மத்தியில் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று எனக்குள் ஒரு ஆர்வம். முதலில் "கிகுஜிரோ" டிவிடியை வாங்கி பார்த்தேன். ஒரு அமைதியான அழகான நடைபயணம் தான் படம். ரசித்து பார்த்தேன். இந்த படத்தின் தழுவல் தான் நந்தலாலா என்று கூறபட்டாலும், நந்தலாலாவில் விஷயம் கொஞ்சம் நிறைய இருக்கும் என்று கண்மூடித்தனமான நம்பிக்கை. அது ஏன்...? காரணம் அந்த படத்தின் இயக்குனர் மிஷ்கின்.

இயக்குனர் மிஷ்கின் தமிழில் தனியாக தெரியும் ஒரு படைப்பாளி. இவரின் முதல் படமான சித்திரம் பேசுதடி வெளிவரும்போது, நான் பள்ளிபடிப்பு முடித்திருந்தேன். வெட்டியாக இருந்ததால் என்னென்ன படங்களுக்கு எப்படி வரவேற்பு கிடைக்கிறது என்று செய்திதாள்களில் போஸ்டர்களை பார்த்து கணித்து வந்தேன். அப்போது பெரிய படங்களுக்கு மத்தியில் அமைதியாக வெளியான இப்படம் நாட்கள் செல்ல செல்ல பிரபலமானது. ஒரு பக்கம் அந்த படத்தில் வந்த "வாளமீனுக்கும் வேலங்கமீனுகும்" என்ற பாடல் மட்டும் பிரபலமாக, இன்னொரு பக்கம் பிரபல இயக்குனர்கள் படத்தை பாராட்டி வந்ததும் தெரிய வந்தது. இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் மிஷ்கினுக்கு ஒரு பாராட்டு கடிதம் எழுதியது படத்தின் போஸ்டரில் வந்ததை பார்த்தேன். "முதல் படத்துக்கு இப்படி ஒரு வரவேற்பா, அப்போ படத்த பாத்தே ஆகணுமே" என்று ஆர்வம் அதிகரிக்க, உடனே சென்று படத்தை பார்த்தேன். ஒரு காதல் கதை என்ற போதும் திரைக்கதையும், கதாபத்திரங்களும் கச்சிதமாக கையாண்டிருந்ததை பார்த்து வியந்தேன். முதல் படத்தில் இத்தனை மெனக்கெடும் ஒரு இயக்குனர் என்ற விதத்தில் அப்போதே மிஷ்கின் மீது எனக்கு ஒரு தனி மரியாதை வந்துவிட்டது.

பின்பு
இவரின் இரண்டாவது படமான "அஞ்சாதே". நம்பிக்கையான இயக்குனரின் படம். எவரின் கருத்துக்கும் காத்திருக்காமல் படத்தை சென்று பார்த்தேன். முதல் படத்திற்கு நேர்மாறான விதம் . கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, பாத்திர வடிவமைப்பு என்று அத்தனையிலும் அவ்வளவு தெளிவு. ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகும் கதாபாத்திரம் என்றாலும் அது மனதில் நிற்கும் விதத்தில் கையாண்டிருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஒரு காட்சியில் ரோட்டில் அடிபட்டு கிடப்பவனை காப்பாற்ற நாயகன் உதவி தேடி பதறும் பொது, ஒரு பூ விற்கும் பாட்டி உதவி செய்யும். "அட போ பா.. அவன் யார்னு கூட தெரியாது. செத்து போய்ட்டான்.அவன தாங்கி பிடிச்சேன். . அதுக்கு எதுக்கு பா காசு. அந்த ஆளு சொல்றதுக்கெல்லாம் கவலை படாத..அவன் போலீஸ் இல்ல நீ தான் போலீஸ்" என்று சொல்லி, ரோட்டில் இறந்தவனின் ரத்த கரை படிந்த இடத்தில பூ தூவி விட்டு செல்லும். யோசித்து பார்த்தால் அந்த பாட்டிக்கும் படத்திற்கும் சம்பந்தம் இல்லை. திரைக்கதை போகிற போக்கில் அந்த கதாபாத்திரத்தை திணிக்க வேண்டிய அவசியமும் இல்லை. னால் ஒரு காட்சிக்கு வந்தாலும் அந்த பாத்திரத்திற்கான அழுத்தத்தையும், நிறைவையும் கொடுத்திருப்பார் இயக்குனர். திரையரங்கில் கைத்தட்டலும், விசில் சத்தமும் காதை கிழித்தது இன்னும் மறக்க முடியாத தருணம். தயா, குருவி, லோகு என்று அவ்வொரு பாத்திரப்படைப்பும் அச்சு அசல். குறிப்பாக முகத்தை காட்டாத ஒரு மொட்டை கதாபாத்திரம் என்னை மெய்சிளிர்கவைத்தது. ஒளிப்பதிவின் நுணுக்கத்தை சொல்லவேண்டுமென்றால், ஒரு காட்சியின் கிருபா தயாவை வீட்டிற்குள் தங்கவைக்கும் போது, அவனது தங்கை வருகிறாள். பதட்டத்தில் தயா இருக்கும் அறையை பூட்டிவிட்டு, தங்கை வந்து போனதும், மீண்டும் அறையை திறப்பான். இந்த காட்சி முழுவதும் கால்களின் அசைவுகளை மட்டுமே முற்படுத்தி காட்டபட்டிருக்கும். ஒரு மனிதன் பதட்டமடையும்போது அவனது கால்கள் எப்படி செயல்படுகின்றன என்று அதில் சித்தரிக்கபட்டிருகும். இதற்கு முன் தமிழில் எந்த இயக்குனரேனும் திரைக்கதையை இந்த விதத்தில் கையாண்டிருகிறாரா என்பது அசாத்தியம் தான்.

இவரின் மூன்றாவது படம் தான் "நந்தலாலா". நவம்பர் 27 (படம் வெளியான அடுத்த நாள்), எனது பிறந்த நாளன்று சென்று படத்தை பார்த்தேன். நான் மீண்டும் பிறந்தது போன்ற ஒரு உணர்வு. இந்த நிமிடம் வரை அந்த அனுபவத்தை மறக்க முடியவில்லை. தாயை தேடி செல்லும் இருவரின் பயணம். இசை பயணம் என்றும் கூட சொல்லலாம். ஏனென்றால் படம் முழுவதும் இளையராஜாவின் இசை நம்முடன் பயணம் செய்யும். இந்த படம் "கிகுஜிரோ"வை தழுவியது என்பதெல்லாம் என்னை பொறுத்தவரை மாற்று கருத்தானது. ஏனென்றால் இரண்டு பேரின் நடைப்பயணம் என்ற அந்த ஒற்றை வரியை தவிர எந்த விதத்திலும் இரண்டு படங்களையும் ஒப்பிட முடியாது. கதை, திரைக்கதை, கதாபாத்திரம் என்ற எந்த வகையிலும் இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை. இன்னும் சொல்லபோனால் கிகுஜிரோவை விட நந்தலாலாவில் சொல்லப்பட்ட விதமும் கருத்தாழமும் கொஞ்சம் அதிகம். நான் கவனித்த, ரசித்த சில இடங்கள் இங்கே.
1) மிஷ்கின் நடந்து போகும்போது கட்டிடத்தின் வெளியில் நிற்கும் ஒருவரிடம் "பசிக்குது" என்று கேட்பார். அதற்கு அவர் "பக்கத்து சந்துல கையேந்தி பவன் இருக்கு, போய் சாப்டு" என்பார். இருட்டாக இருப்பதால் அந்த குறுகிய சந்தை உற்று பார்த்துவிட்டு உள்ளே செல்லாமல் போய் விடுவார். சிறிது நேரம் அந்த இடத்திலேயே காட்சி நகராமல் இருக்கும். ஆனால் அதற்கான விடையை வேறொரு காட்சியில் கொடுத்திருப்பார். தன் தாயை மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டு ஒரு இருட்டான குறிகிய சந்தில் நடந்து வெளியில் வந்ததும் வானத்தை உற்று பார்த்துவிட்டு செல்வார். தான் ஒரு மனநலம் பாதிகபட்டவனாக தாயின் மேல் கோபம் இருந்தபோது இருட்டின் மேல் பயம் இருந்தது. இப்போது தாயின் அன்பை உணர்ந்ததால் தனக்கு தெளிவு பிறந்தது என்பததை உணர்த்தும் விதத்தை அந்த காட்சி விவரிக்கும்.
2) தன் தாய் இருக்கும் வீட்டை நோக்கி கோபமாக செல்லும்போதும் ஒரு வீட்டின் வாயிற்கதவை பிடித்து தொங்கிவிட்டு பிறகு செல்வார். வீட்டிற்குள் சென்று "அவள வரசொல்லு..வெளிய வாடி..ஆஸ்பத்திரில எத்தன பேரு அடிச்சாங்க தெரியுமா டி..உன்ன அடிச்சா தெரியும்.." என்று சொல்லிகொண்டே சென்று ஓரத்தில் இருக்கும் ஒரு பெட்டிக்குள் இருந்து கூழாங்கற்களை எடுத்து அகி(சிறுவன்)யிடம் கொடுத்துவிட்டு செல்வார். அந்த கூழாங்கற்கள் அவர் சிறுவயதில் வீட்டில் இருந்த போது பெட்டிக்குள் போட்டு வைத்தது. மனதளவில் தன் பாலிய ஞாபகங்கள் இன்றும் இருப்பதை அந்த இடம் விவரிக்கும்.
3) ஒருமுறை வண்டியில் செல்கையில் அகியிடம் இருக்கும் தன் அம்மாவின் புகைப்படம் காற்றில் கைநழுவி ஒரு முள்வேலியில் சிக்கிக்கொள்ளும். அதை எடுக்கவேண்டும் என்று வண்டியை நிறுத்தி எடுக்கசொல்லி அழுவான். முடிவில் தன் தாய்க்கு இன்னொரு குடும்பம் இருப்பதை பார்த்து அதிர்ந்ததும் அவனை அறியாமல் அந்த புகைப்படம் காற்றில் கைநழுவி பறந்து அதே முள்வேலியில் சிக்கிக்கொள்ளும். தன் தாய் மீது வைத்திருந்த அன்பு அவனிடத்தில் இல்லாமல் போவதை அந்த இடம் வசனங்கள் இல்லாமல் இசையுடன் காட்சி வாயிலாக மட்டுமே விவரிக்கும்.
4) தாயன்பு என்ற ஒரு புள்ளியை சுற்றியே கதை நகர்வதால் அதில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்களை தாயன்பும், தாயின் மேல் இருக்கும் கோபத்தையும் வெளிக்காட்டுவதாகவே சித்தரிக்கபட்டிருகும். குறிப்பாக சொன்னால், வீட்டிற்கு வெளியில் ஒரு குழந்தை அழுவதை பார்த்து அகி ஓடிச்சென்று பார்ப்பான். "உன் அம்மா எங்க பாப்பா" என்று கேட்கும் வேலையில் அந்த குழந்தையின் அம்மா வந்து "செல்லம்..அம்மா வந்துட்டேன்ல .. அழாத..அழகூடாது" என்று சொல்லி குழந்தையை தூக்கிகொண்டு செல்வாள். அப்போது, தன் அம்மா அவனுடன் இல்லை என்ற அகியின் ஏக்கத்தை நாம்மால் உணர முடியும்.
ஒரு ஊனமுற்றவனை மிஷ்கின் நொண்டி என்று சொன்னதும் கோபத்தில் "நா நொண்டி தான் டா.. என்ன பெத்து போட்டுட்டு போயிட்டாள்ல..அவள சொல்லணும்..நா வயித்துலேர்ந்து வெளிய வந்ததும் செத்து போயிட்டாள்ல..நா வயித்துல இருக்கும்போதே செத்து போயிருக்கலாம்ல அவ.." என்று தாயின்மீதுள்ள கோபத்தை வெளிக்கொண்டு அழுவான்.
வீட்டு முகவரியை கேட்க அகி ஒரு வீட்டுகதவை தட்டுவான். கதவைத்திறந்து "யார் வேணும்" என்று ஒரு பெண் கேட்கும். அப்போது உள்ளிருந்து "இந்திரா" என்று குரல் கேட்கும். "இருமா..ஏன்மா கத்திட்டே இருக்க..சனியன்.. எப்போதா தொலையுமோ" என்று முணுமுணுத்துவிட்டு அகியிடம் பேசும். இப்படி ஒவ்வொரு விதத்தில்
மனிதர்கள் தாயன்பை எப்படி கையாளுகிறார்கள் என்பது விளக்கபட்டிருகும். இன்னும் படத்தில் சுவாரஸ்யமான இடங்கள் நிறைய உண்டு. ஆனால் கிகுஜிரோவில் இது போன்ற நுனுகங்களையும், ஆழத்தையும் என்னால் உணர முடியவில்லை. தனது முந்தைய படங்களை போல இந்த படத்திற்கும் பாராட்டும் மதிப்பும் கிடைத்தது மிஷ்கினுக்கு. ஆனாலும் இது மக்களிடம் முழுமையாக சென்றடையும் முன்பே அதை வெளியேற்றியது தான் இன்றுவரை என்னக்குள் கோபத்தை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலும் மிஷ்கின் மீது சாட்டப்பட்ட குற்றம் படத்தின் எழுத்து -இயக்கம் என்ற இடத்தில தன்னுடைய பெயரை போட்டதும், மூலக்கதை டகேஷி கிட்டானோ(Takeshi Kitano) என்பதை குறிப்பிடவில்லை என்பதும் தான். எனக்குள்ளும் அந்த உறுத்தல் இருந்தது. ஆனால் விஜய் டிவியில் அவர் பேசியபோது வெளிப்படையாக கூறிய சில விஷயங்கள் அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர்த்தியது. தான் தமிழில் உதவி இயக்குனராக பணியாற்றிய போதும், பெரும்பாலும் சினிமாவை கற்று கொண்டது அகிரா குரோசவா(Akira Kurosawa) மற்றும் டகேஷி கிடனோ(Takeshi Kitano) விடம் இருந்துதான். அவர்களுடைய படங்களின் நுணுக்கங்கள், வடிவமைப்பு போன்றவையே தான் சினிமாவை கற்றுக்கொள்ள உத்வேகமாக இருந்தது என்று கூறினார். காப்பி அடிக்கும் ஒரு இயக்குனர் இப்படி வெளிப்படையாக அவர்களின் பெயரை குறிப்பிடுவாரா? அப்படியென்றால் போஸ்டரை வைத்தே தெய்வதிருமகள் ஐ யம் சாம்(Iam Sam)மிலிருந்து எடுக்க பட்டது என்பது தெரியும்போது, இயக்குனர் விஜய் இன்னும் இது தன்னுடைய சொந்த படைப்பு என்று கூறுவதை ஏற்று கொள்ள முடிகிறதா?

நந்தலாலாவில் தொடக்கத்தில் பெயர் பட்டியல் இடுகையில் ஒரு நீரோடை ஓடுவதை காணலாம். அகிரா குரோசவாவின் ட்ரீம்ஸ்(1990) படத்தில் இறுதியில் பெயர் பட்டியல் இடுகையில் அதே போன்ற நீரோடையை காணலாம். இதையும் காப்பி என்று கூற முடியுமா? காப்பி அடிக்க முழு படமும் இருக்கும்போது இந்த வடிவத்தை எடுப்பார்களா? தான் ரசித்த ஒரு விஷயத்தை தன்னுடைய படைப்பில் காட்டும்போது அதை காப்பி என்று ஒரே வார்த்தையால் ஓரங்கட்டுவதா? சமீபத்தில் வெளியான மிஷ்கினின் "யுத்தம் செய்"யில் அகிரா குரோசவாவின் ரேஷாமன் படத்தை குறிப்பிடுவதை காணலாம். இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களில் அவர் ரசித்த விதத்தை உணர்த்தி இருப்பார். ஆனால் நம் மக்களை பொறுத்தவரை இது காப்பி.

காப்பி என்று முண்டியடித்து நிற்கும் இவர்கள் இதற்கு முன் வந்த எத்தனை படங்களை இப்படி எதிர்த்தார்கள்? காட்பாதர்(Godfather) இல்லாமல் ஒரு நாயகனும், மிஸ்ஸஸ் டவுட் பையர்(Mrs. Doubt Fire) இல்லாமல் ஒரு அவ்வை ஷண்முகியும், பைசைக்கிள் தீவ்ஸ்(Bicycle thieves) இல்லாமல் ஒரு பொல்லாதவனும், மெமெண்டோ(Memento) இல்லாமல் ஒரு கஜினியும், ஸ்டேட் ஆப் ப்ளே(State of Play) இல்லாமல் ஒரு "கோ"வும் இவர்களுக்கு கிடைத்திருக்குமா. அயன் படத்தில் வயிற்றுக்குள் போதை பொருள் கடத்தும் நுணுக்கத்தை மரியா புல் ஆப் கிரேஸ்(Maria full of grace) என்ற ஸ்பானிஷ் படத்தில் ஆச்சு அசலாக பார்க்கலாம். கௌதம் மேனன் எடுத்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் திரைக்கதை டெரெய்ல்ட்(Derailed) என்ற ஆங்கில படத்தில் அப்படியே இருக்கும். இதையெல்லாம் எதிர்த்தார்களா அல்லது இந்த படங்களை காப்பி என்ற பெயரில் ஓரங்கட்டினர்களா? இவ்வளவு ஏன்.. "அதிக பொருட்செலவில் எடுத்து அதிக வசூல் குவித்து உலகெங்கும் மெகா ஹிட்டான ஒரு தமிழ் படம்" என்று இன்றுவரை தம்பட்டம் அடித்து கொண்டிருக்கும் எந்திரன், ஐரோபோட் (iRobot), பைசென்ட்டேன்னியால் மேன்(Bicentennial Man) இல்லாமல் வந்திருக்குமா? ஒரு பிரபல நடிகர் நடித்தால் அது கார்டூனிளிருந்து காப்பி அடித்தாலும் வெற்றிதானா? சற்றும் வாய்கூசாமல் தனது கனவுபடம்(Dream Project) என்று இன்றுவரை சொல்லிகொள்ளும் ஷங்கரை விட நேர்மையாக, வெளிபடையாக இருக்கும் மிஷ்கின் எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை.

பணம், பொருட்செலவை மட்டும் முன்னோக்காக கொண்டு , அதிக லாபம் ஈட்டுவதில் மட்டும் குறியாக இருக்கும் ஷங்கர், விஜய் போன்ற இயக்குனர்களுக்கு மத்தியில் மனித உணர்வுகளை கருவாக கொண்டு மக்களுக்காக படம் எடுக்கும் மிஷ்கின் போன்ற கலைஞர்களை வரவேற்க தவறுகிறார்கள் என்பதே என் ஆதங்கம். புரிந்து கொள்ளும் காலம் வரும். காத்திருப்போம்.

Wednesday, July 13, 2011

அஞ்சலி (1990)


இத்தனை வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை பற்றி எழுத வேண்டுமா என்று தோன்றினாலும், எழுதியே ஆகா வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு ஆர்வம். பொழுதை கழிக்க சினிமா பார்த்து வந்த எனக்கு வாழ்கையின் பல கோணங்களை திரையில் காட்டி என்னை மாற்றிய இயக்குனர்கள் பலர். அதில் தமிழில் குறிப்பிட கூடிய ஒரு மனிதர் இயக்குனர் திரு. மணிரத்னம். பகல் நிலவு, மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து என்று காலத்திற்கேற்ப புதுமையும், வித்தியாசமும் தனது படங்களில் தந்த பின்பும், அவர் 1990இல் எடுத்த "அஞ்சலி" மட்டும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஓவ்வொரு முறை பார்க்கும்போதும் ஏற்படுத்துகிறது. இந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இப்போது நிச்சயம் வளர்ந்திருப்பார்கள். அதனால் கதையின் பாத்திரங்களாகவே அவர்களை பற்றி பேசுவோம்.

அம்மா சித்ரா(ரேவதி) வுக்கு மூன்றாவது குழந்தை அஞ்சலி பிறக்கும் தருணம். மகன் அர்ஜுன்(தருண்), மகள் அணு காத்துகொண்டிருக்க, குழந்தை இறந்துவிட்டதாக சொல்கிறார் அப்பா சேகர்(ரகுவரன்). அம்மாவுக்கு இந்த நேரத்தில விஷயம் தெரிந்தால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், இயல்பு நிலைக்கு திரும்பிய பின்பு நிலைமையை எடுத்து கூறுகின்றார் அப்பா. மூத்த மகனும், இளைய மகளும் இருப்பதனால் இழப்பை ஏற்றுகொண்டு நிலைமையை கடந்து செல்கிறாள் அம்மா. இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் புது வீட்டிற்கு குடிபுகுகின்றனர் சேகர் குடும்பத்தினர். பெரியவர்களால் கூட கட்டுப்படுத்த முடியாத வாண்டுகளின் ராஜ்யம் தான் அந்த கட்டிடம் முழுவதும். "ஏரியா வுக்கு புதுசு டா இவன்" என்ற ஏளனத்தில் அர்ஜுனை பார்கிறது அந்த ராஜ்யம். பிறகு முட்டல், மோதல், சமாதானம் என்று ஆகி அவர்களின் கூட்டத்தில் அர்ஜுனையும், அணுவையும் சேர்த்து கொள்கின்றனர். அஞ்சலியின் இழப்பு அடிக்கடி வந்து போனாலும் சந்தோஷம், அமைதி என்று செல்கிறது வாழ்கை. இப்படியிருக்க அப்பா வீட்டில் பொய் சொல்வது சிறிய விஷயமாக வீட்டில் தெரிந்து, கொஞ்சம் கொஞ்சமாக அப்பாவுக்கு வேறு ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பது தருணுக்கும், அம்மா வுக்கும் வெவ்வேறு இடங்களில் நேரில் பார்பதன் மூலம் தெரியவருகிறது. விஷயம் வெடிக்க வேறு வழியின்றி அப்பா உண்மையை சொல்கிறார். அப்படி என்ன உண்மை அது? அஞ்சலி சாகவில்லை. உயிரோடு மனநல குழந்தைகள் காப்பகத்தில் தனது கவனிப்பில் வளர்கிறாள். அந்த பெண் அஞ்சலியை கவனிதுகொள்ளும் தாதி(nurse). பிறக்கும்போதே மூளை வளர்ச்சி குன்றி பிறந்தமையால் அதை குடும்பத்திடம் இருந்து மறைத்ததாகவும் சொல்கிறார் அப்பா. இனியும் அஞ்சலியை விட்டு பிரிய கூடாது என்று வீட்டிற்கு கொண்டு வருகிறாள் அம்மா. இரண்டு வருடங்களாக அப்பாவின் அரவணைப்பில் வளர்ந்தமையால் அம்மாவிடம் ஒட்ட மறுக்கிறாள் அஞ்சலி. தங்கை மனநலம் குன்றியமையால் அர்ஜுனுக்கும், அணுவுக்கும் அஞ்சலியை பிடிக்கவில்லை. வீட்டில் ஒரு இருண்ட நிலையே நிலவுகிறது. "டேய்..அர்ஜுன் உன் தங்கச்சி பைத்தியமா" என்று கிண்டலடிக்கும் நண்பர்கள் , ஒரு கட்டத்தில் அஞ்சலியை கயிறு கட்டி விளையாடுவதை பார்த்து அவர்களை தாக்குகிறான் அர்ஜுன். அவர்களும் அர்ஜுனை அடித்து உதைக்கின்றனர். வீட்டில் காயத்துடன் இருக்கும் அண்ணனை தொட்டு, அவனுக்கு வலிப்பத்தை பார்த்து அழுகிறாள் அஞ்சலி. இதனால் அஞ்சலியின் மீது பாசம் வருகிறது அண்ணனுக்கும் அக்காவுக்கும். பிறகு அஞ்சலியை வாண்டுகளிடம் கூட்டி சென்று "அஞ்சலி..என் தங்கச்சி..இப்போ அவ மேல கை வேய்ங்க டா பாக்கலாம்" என்று அர்ஜுன் சொல்கிறான். பார்க்க சிறிய பொம்மை போல் இருக்கும் அந்த குழந்தையை பார்த்ததும் அவர்களுக்கே பிடித்துவிடுகிறது. அனைவரும் அஞ்சலியிடம் அன்போடு விளையாடுகின்றனர். அஞ்சலி அந்த வட்டாரத்தில் செல்ல குழந்தையாக ஆகிறாள். இப்படியிருக்க திடீரென்று அஞ்சலியின் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இன்னும் எவ்வளவு நாள் இந்த நிலைமையை பிஞ்சு உடல் தாங்கும் என்று தெரியவில்லை என மருத்துவர்கள் கை விரிக்கின்றனர். அன்று அம்மா இந்த நிலைமையிலும் அஞ்சலி தன்னிடம் பேச மறுக்கிறாள் என்று அவளை பார்த்து அழுகிறாள். சற்றும் எதிர்பார்காத பொது அஞ்சலி "அம்மா" என்று அழைக்கிறாள். பூரித்துப்போன அம்மா அவளிடம் முத்த மழை பொழிகிறாள். வழக்கம்போல் காலை அக்கா அஞ்சலியை வந்து எழுப்ப, அவள் எழவில்லை. ஏனென்றால் அஞ்சலி இறந்து விடுகிறாள்.

பெரியவர்களை நடிக்க வைக்கவே பாடுபடும் இயக்குனர்களின் மத்தியில் முழுக்க முழுக்க குழந்தைகளை கதை நாயகர்களாக நடிக்க வைத்ததில் இயக்குனர் மணிரத்னம் அன்றே தமிழ் சினிமா வின் தேர்ந்த இயக்குனர் என்பதை படம் பார்க்கும்போது உணர முடியும். கதையின் போக்கில் திரைக்கதை சென்றாலும் வாண்டுகளின் அட்டகாசங்களை திணித்திருப்பது புத்துணர்ச்சி. குடியிருப்பில் வசிக்கும் தாத்தாக்களை பாட்டியிடம் மாட்டிவிடுவதும், காதல் ஜோடிகளுக்கு ரகசியமாக உதவி செய்வதும், அதற்கு வரும் எதிர்ப்பை அவர்களே காதல் ஜோடிகளுக்கு துணை நின்று சரிசெய்வதும், நடுராத்திரியில் சாலையில் புத்தாண்டு கொண்டாடுவதும் என படம் முழுக்க அடக்க முடியாத அட்டகாசங்கள். பாடல்களில் அவர்களின் நடன அசைவுகளுக்கு பெரியவர்கள் கூட ஈடுகொடுக்க முடியுமா என்ற கேள்வி எழும்.

அம்மா சித்ரா வாக ரேவதியும், அப்பா சேகர் ஆக நடிகர் ரகுவரனும் கதைக்கு கச்சிதம். குறும்பு செய்யும் குழந்தைகளை அதட்டும்போதும், அஞ்சலியை பேசவைக்க துடிக்கும்போதும் என பல இடங்களில் நிறைவான அம்மாவாக பிரதிபலிக்கிறார் ரேவதி. மகள் அணுவை அடித்துவிட்டு பின்பு மன்னிப்பு கேட்பதும், தான் பொய் சொல்வதன் காரணத்தை கேட்டு மகனும் மனைவியும் குடையும் பொது உண்மையை சொல்ல முடியாமல் தவிப்பதும் என தனது பங்கை நிறைவாக செய்திருக்கிறார் ரகுவரன்.

கதையில் தனியாக திரியும் ஒரு கதாபாத்திரம் நடிகர் பிரபு. கொலைக்காக தண்டனை அனுபவித்து விட்டு தனியாக இருண்ட வீட்டில் வசிக்கிறார். யாரிடமும் பழகாத அஞ்சலி பிரபுவிடம் தேடி சென்று விளையாடுகிறாள். அஞ்சலியை பிரபுவிற்கு பிடிக்கிறது. தான் வேலைபார்க்கும் இடத்தில நடக்கும் கொலையை நேரில் பார்க்கும் ரகுவரன், சாட்சி சொல்ல முன் வருகிறார். இதனால் கோபம் அடையும் கொலையாளி ரகுவரனை பழிவாங்க அவரை தேடி வருகிறார். அஞ்சலி மீது உள்ள பிரியத்தினால் அந்த குடும்பத்திற்கு எதுவும் நடந்து விட கூடாது என பிரபு அந்த கொலையாளியை கொல்கிறார். இதனால் பிரபு மறுபடியும் கைது செய்ய படுகிறார். கதையில் இல்லாத கதாப்பாத்திரம் என்றாலும் அதற்கும் ஒரு நிறைவு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

அர்ஜுனாக தருண், அணுவாக ஸ்ருதி. இருவரும் போட்டி போட்டுகொண்டு நடித்திருக்கிறார்கள். யார் பலசாலி என்று பார்க்க சண்டை போடுவதிலும், "நீங்க தான்பா பொய் சொல்றிங்க. நேத்து நீங்க வெளியூருக்கே போகல..ஒரு பொண்ணு கூட கை புடிச்டு பேசிட்டு இருந்திங்க. நான் பாத்தேன் பா" என்று உணர்ச்சி பொங்க கத்தும் இடத்திலும் தருண் அபாரம். அம்மா, அப்பா பேசிகொண்டிருக்கையில் "ஏய்.. கொஞ்சல்" என்று கிண்டல் அடிப்பதிலும், அம்மா அண்ணனை திட்டும்போது "அண்ணா அடிச்சனானு கேக்குறியே. அவங்க அண்ணாவ எப்டி அடிச்ருகாங்க பாரு மா..அண்ணா பாவம்.." என்று கட்டிபிடித்து அழுகும் போதும், எல்லாவற்றிற்கும் மேலாக அஞ்சலி இறந்த பின்பு "அம்மா, அப்பா, அண்ணா லாம் இருகாங்க பாரு அஞ்சலி.. friends எல்லாம் வந்திருகாங்க எழுந்திரு அஞ்சலி..எழுந்திரு" என்று பதறி கத்தும் போதும் ஆச்சர்யமான நடிப்பு. இந்த படத்திற்கு பிறகு ஏன் இந்த பெண் நடிக்கவில்லை என்பது கொஞ்சம் வருத்தம்.

இவர்கள் அனைவரையும் மிஞ்சிய ஒரு ஆச்சர்யம் தான் அஞ்சலியாக நடித்த ஷாமிலி. படத்தை பார்த்தவர்களுக்கு குறைந்தது ஒரு வாரமேனும் அந்த குழந்தையின் நடிப்பு மனதை விட்டு நீங்காது. உதட்டை பிதுக்கி கொண்டு அழுவதும், சுவற்றை பிடித்து கொண்டு நடப்பதும், தனியாக பெசிகொண்டிருபதும் என மழலை உணர்வுகளை ஆச்சு அசலாய் கொண்டு வந்திருக்கும் அந்த குழந்தை. இத்தனை இயற்கையான நடிப்பு எப்படி இந்த குழந்தையின் மூலம் சாத்தியமாகும் என்று தோன்றும் போதெல்லாம் இந்த படத்தின் இயக்குனர் தான் நினைவுக்கு வருவார். தன் படத்திற்காக குழந்தையை நடிக்க வைக்க வேண்டும் என்பதை விட, அந்த குழந்தைக்காகவே படத்தை எடுக்க வேண்டும் என்ற அவரின் எண்ணம் வெளிப்படுகிறது.

1991ல் படத்திற்கும், குழந்தை நட்சத்திரமாக தருண், ஸ்ருதி, ஷாமிலிக்கும் தேசிய விருது கிடைத்தது படத்திற்கான மிக பெரிய அங்கீகாரம்.
படத்தில் காட்சியின் உயிரோட்டம் இசைஞானி இளையராஜாவின் இசையும், மது அம்பத்தின் ஒளிபதிவும். இளையராஜாவிற்கு இது 500வது படம் என்பது சிறப்பம்சம். பின்னணி இசையிலும், பாடல்களிலும் சரி சமமாக தனது பங்கை பூர்த்தி செய்திருக்கிறார். மது அம்பத்தின்(1984, 2006, மற்றும் சமீபத்தில் "அடமின்டே மக்கன் அபு" என்ற மலையாள படத்திற்காக 3முறை தேசிய விருது பெற்றவர்) ஒளிப்பதிவு காட்சிகளின் சூழ்நிலைகேற்ப இருளையும் ஒளியையும் அழகாக காட்டுகிறது.

ஒரு இந்தியனாய் தன் படைப்பின் மூலம் உலகை திரும்பி பார்க்கவைத்த இந்த இணையில்லா இயக்குனர் இன்னும் எத்தனை உயரங்களை தொட்டாலும், இந்த குழந்தை காவியம் அவரை என்றும் தனியாக அடையாள படுத்திக்காட்டும் என்பதில் நாம் பெருமிதம் கொள்வோம்.